சென்னை: குட்டை, ஏரியில் மூழ்கி அண்ணன், தங்கை உட்பட 4 பேர் பலியாகினர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த புன்னை பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம்(45), கூலித்தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி தனியார் கம்பெனி ஊழியர். இவர்களது மகன்கள் தினேஷ்(11), ரஞ்சித்(9), மகள் சுப்ரியா(10). இதில் தினேஷ் 6ம் வகுப்பும், சுப்ரியா 5ம் வகுப்பும் படித்தனர். ரஞ்சி 4ம் வகுப்பு படித்து வருகிறார்.
பள்ளி விடுமுறை என்பதால் தினேசும், சுப்ரியாவும் நேற்று மதியம் வீட்டின் அருகே உள்ள மீன்கள் வளர்க்கும் குட்டையில் குளிக்க சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர். புகாரின்பேரில் நெமிலி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே காரைமேடு ஊராட்சி மணல்மேடு கிராமத்தில் வசிப்பவர் வெற்றி வீரன்.
இவரது மகன் மாவீரன் (9). அதே பகுதியில் வசிக்கும் பிரகாஷ் மகன் சக்தி (9). இருவரும் காரைமேடு ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தனர். இருவரும் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் திருவாலி ஏரிக்கு சென்றுள்ளனர். ஆடைகளை அவிழ்த்து கரையில் வைத்து விட்டு குளித்தபோது ஏரியில் மண் எடுத்ததால் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி நீரில் மூழ்கி னர். மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் ஏரியில் வலை வீசி தேடிய போது இரு சிறுவர்களின் சடலமும் சிக்கியது.
* தண்ணீர் தொட்டியில் சிக்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நெய்தலூர் ஊராட்சி சின்னக்களத்துப்பட்டியை சேர்ந்த முருகேசன்- ரம்யா தம்பதியர். இவர்களுக்கு 6 வயதில் கிருஷ்மிதா என்ற மகளும், 2 வயதில் தர்ஷித் என்ற மகனும் உள்ளனர். நேற்று காலை தர்ஷித் அருகில் வசிக்கும் அபிலன் மகன் மயிலனுடன் (3) சிறிய சைக்கிளில் சாலையில் விளையாடிக்கொண்டு இருந்தான். பின்னர் இருவரும் அருகில் உள்ள விவசாய தோட்டத்திற்கு சைக்கிளுடன் சென்றனர்.
அங்குள்ள 5 அடி ஆழ தொட்டியில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்கு தரைக்கு அடியில் குழாய் மூலம் தண்ணீர் சென்று கொண்டு இருந்தது. இருவரும் தொட்டி அருகே தண்ணீர் பாட்டிலை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது பாட்டில் தவறி விழவே அதை எடுக்க முயற்சி செய்த தர்ஷித் உள்ளே விழுந்தான். சுமார் 10 இஞ்ச் சுற்றளவு கொண்ட குழாயில் அவனை தண்ணீர் இழுத்து சென்றுள்ளது. பெற்றோர் தேடி வந்தபோது தொட்டியில் தர்ஷித் விழுந்தது தெரிய வந்தது.
தீயணைப்பு படையினர் வந்து தொட்டியில் இருந்து விவசாய நிலத்திற்கு செல்லும் குழாயை பொக்லைன் இயந்திரம் மூலம் 8 இடங்களில் குழிதோண்டி உடைத்து அதிநவீன லைட் மூலம் பார்த்தனர். 200 மீட்டர் தூரத்தில் சின்னக்களத்துபட்டி சேப்பளாப்பட்டி மெயின் ரோட்டின் அருகே 5வது குழியில் உள்ள குழாயில் தர்ஷித் சடலம் சிக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு 3 மணி நேரம் போராடி மீட்கப்பட்டது.
இதேபோல் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் ஒன்றியம் பெருந்தொழுவு ராமலிங்கபுரத்தை சேர்ந்தவரல் செல்வக்குமார் (37). இவரது 2வது மகன் நித்திரனை நேற்று திடீரென காணவில்லை. பெற்றோர் தேடிய போது வீட்டில் இருந்த 60 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து குழந்தை இறந்தது தெரியவந்தது.