திருமலை: போலீசார் ட்ரோன் மூலம் இரவு நேரத்தில் கண்காணித்தபோது நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர்கள் சிக்கினர். அவர்களின் பெற்றோரை வரவழைத்து எச்சரிக்கை செய்தனர். ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபுநாயுடு பதவியேற்றதில் இருந்து தொழில்நுட்ப பயன்பாடுகளை பயன்படுத்தி பொதுமக்களுக்கு சேவைகளுக்கு எளிதாக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதேபோல் காவல்துறையிலும் குற்றங்களை கண்டறியவும், குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவும் பல்வேறு தொழில்நுட்ப முறைகளை கையாண்டு வருகின்றனர். அதன்படி இரவு ரோந்துக்கு மாநிலம் முழுவதும் அனைத்து காவல் நிலையத்திற்கும் பயிற்சி வழங்கி காவலர்களுக்கு ‘ட்ரோன் கேமராக்கள்’ வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் போலீசார் இரவு நேரத்தில் மாவட்டம் முழுவதும் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பதி எஸ்.பி. ஹர்ஷவர்தன்ராஜு உத்தரவின் பேரில் திருப்பதி இந்திரா பிரியதர்ஷினி மார்க்கெட், காட்டன் மில் உள்ளிட்ட பகுதிகளில் இருட்டிலும் தெளிவாக வீடியோ பதிவு செய்யும் ட்ரோன் கேமராக்கள் கொண்டு நேற்றிரவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ட்ரோன் கேமராவில், நள்ளிரவில் இந்திரா மைதானம் என்ற இடத்தில் சில வாலிபர்கள் நடுரோட்டில் பிறந்தநாள் விழா கொண்டாடுவது பதிவாகியது. உடனடியாக திருப்பதி சிறப்பு படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று கவுன்சலிங் வழங்கினர். அப்போது, மீண்டும் சாலையில் பிறந்தநாள் விழா கொண்டாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். பின்னர் அவர்களிடம் கூறியதாவது: இரவில் தங்கள் பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள் என்பதில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். நேரம் கடந்த பிறகும் அவர்கள் வீட்டிற்கு வரவில்லை என்றால், அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? ஒவ்வொரு நாளும் தங்கள் பிள்ளைகளிடம் கேட்டால், அவர்கள் நிச்சயமாக சரியான நேரத்தில் வீட்டிற்கு வருவார்கள். தங்கள் பிள்ளைகள் மோசமான பாதையில் சென்றால், அதில் குடும்பத்தினரும் பங்கு வகிக்கிறார்கள் என்பதை நினைவு கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இல்லாவிட்டால் தவறான பாதைக்கு செல்ல நேரிடும். இவ்வாறு போலீசார் கூறினர். பின்னர் வாலிபர்களை அவர்களின் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.