திருக்கழுக்குன்றம்: அரசு பேருந்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் படிக்கட்டில் நின்று பயணம் செய்து, கலாட்டாவில் ஈடுபட்டதால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பேருந்தை பாதி வழியில் நிறுத்தி சென்றனர். இச்சம்பவம், திருக்கழுக்குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மாமல்லபுரத்திலிருந்து கடும்பாடி, பட்டிக்காடு, திருக்கழுக்குன்றம் வழியாக செங்கல்பட்டுக்கு தடம் எண் 108கே என்ற அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இப்பேருந்தில் வழி நெடுகே உள்ள கிராமங்களை சேர்ந்த வேலைக்கு செல்பவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் என பல்வேறு தரப்பினர் தினமும் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், பேருந்தினுள் இருக்கைகள் காலியாக இருந்தாலும் சில இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளே செல்லாமல் படிக்கட்டுகளில் தொங்கியபடியும், வேலைக்கு மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் பெண்களை கேலி, கிண்டல் செய்து பாட்டு பாடுவதும், பேருந்தின் பக்க வாட்டில் அதிக சத்தத்துடன் மேளம் அடிப்படிதும் என தினமும் இந்நிகழ்வுகள் தொடர் கதையாகி வருகிறது. இதை ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தட்டிக் கேட்டால் அவர்களை அசிங்கமாக பேசி, அவர்களை அடிக்க முயல்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலையும் வழக்கம்போல் பேருந்தில் படிக்கட்டு பயணம், மேளம், பாட்டு என தொடர்ந்த நிலையில் (108 கே) பேருந்தை ஓட்டுனர் திருக்கழுக்குன்றம் பஜனை கோயில் அருகே நிறுத்தி விட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்து விட்டு ஓட்டுனரும், நடத்துனரும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நின்று விட்டனர். அதன் பிறகு போலீசார் அங்கு சென்றனர். போலீசாரைப் பார்த்ததும் சிலர் ஓடி விட்டனர். மேலும், அங்கிருந்த பேருந்தில் கலாட்டா செய்தவர்களை போலீசார் எச்சரித்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பேருந்து தாமதமாக சென்றதால் பயணிகள் அனைவரும் அவதிக்குள்ளாகினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.