திருப்பூர்: அரசு பஸ்சில் இருந்து முதியவரை கீழே தள்ளி விட்ட வீடியோ வைரலானதால் டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்திற்கு செல்வதற்காக முதியவர் ஒருவர் அரசு பஸ்சில் ஏறி உள்ளார். அந்த முதியவரை பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் கீழே இறக்கி தள்ளி விட்டனர். மேலும் தடியால் அவரை தாக்கினர். இச்சம்பவத்தை பஸ் நிலையத்தில் இருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சமூக வலைதளங்களில் அந்த டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்தது. இதைத்தொடர்ந்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் ஈரோடு மண்டலத்திற்கு உட்பட்ட கோபிசெட்டிபாளையம் டெப்போவில் பணிபுரியும் டிரைவர் முருகன் மற்றும் கண்டக்டர் தங்கராஜ் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக, இருவரின் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு போக்குவரத்துக்கழக மண்டல பொது மேலாளர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இருவரையும் சஸ்பெண்ட் செய்து மண்டல பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.