சேலம்: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஓபிஎஸ் தூண்டுதலின் பேரில், டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால் பேசி வருகிறார் என்று சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவன் கூறினார். சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவன், அதிமுக எம்எல்ஏக்கள் ராஜாமுத்து, மணி, ஜெய்சங்கரன், நல்லதம்பி ஆகியோருடன், நேற்று காலை சேலம் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு வந்தார். அங்கு கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், ஜாமீனில் வெளி வந்துள்ள ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால் மீது, புகார் மனு கொடுத்தார். பின்னர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், அளிதத பேட்டி:
ஊடகங்களுக்கு தொடர்ந்து பல்வேறு பொய்யான தகவல்களை தனபால் தெரிவித்து வருகிறார். அதில், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே என்னிடம் பைகளை கொடுத்ததாக அவர் கூறியிருக்கிறார். அது முற்றிலும் தவறு. அவரது தம்பி கனகராஜ், விபத்தில் இறந்தபோது, ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து, இதே தனபால் பேட்டி அளித்தபோது, என்னை பற்றி எந்த தகவலும் சொல்லவில்லை. கொடநாடு வழக்கில் இறந்த கனகராஜிற்கே சம்மந்தமில்லை என்று சொல்லி உள்ளார். தற்போது ஓபிஎஸ் தூண்டுதலின் பேரில், தனபால் பொய்யான தகவல்களை தெரிவித்து வருகிறார். அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்யும் போது, தனக்கு மனநிலை பாதிப்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவர்களின் சான்றிதழையும் இணைத்து வழங்கியிருந்தார். அதன்படியே, ஊட்டி நீதிபதி அவருக்கு ஜாமீன் கொடுத்தார். அதனால் தனபால் மனநிலை பாதிக்கப்பட்டவர். காலையில் ஒன்று பேசுவார், மாலையில் மற்றொன்றை பேசுவார். அவரது பேச்சை ஊடகங்கள் பெரிதாக்கி விட்டது. 2 நாட்களுக்கு முன்பு, தனபாலின் மனைவி, சேலம் எஸ்பியிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார். அவரும், கணவருக்கு 15 வருடங்களாக மனநிலை பாதிப்பு உள்ளது.
தற்போது தனக்கும், தனது குழந்தைகளுக்கும் அவரால் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும், பயமாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்து கொண்டு, தூண்டுதலின் பேரில் என் மீது குற்றச்சாட்டு தெரிவிப்பதால், தனபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். கொடநாடு வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், அதுதொடர்பாக வேறு எதுவும் கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.