பெரம்பூர்: சென்னை சூளைசாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர் முருகன் (40). ஆட்டோ ஓட்டி வருகின்றார். இவர், நேற்று முன்தினம் மாலை பெரம்பூர் லோகோ அருகில் சவாரியை முடித்து வீட்டுக்கு செல்வதற்காக பெரம்பூர் மங்களபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை வழியாக சென்றபோது, 2 பேர் அவரது ஆட்டோவை மறித்து சவாரி ஏறியுள்ளனர். செம்பியம் பேப்பர் மில்ஸ் சாலையில் ஆட்டோவை நிறுத்தச்சொல்லி இறங்கிய அவர்கள், முருகனை சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டு, அவரது ஆட்டோ மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர்.
இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் முருகன் புகார் கொடுத்துள்ளார். போலீசார், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகா மாதர்பாக்கம் பகுதியை சேர்ந்த குமார் (34), சென்னை கந்தன்சாவடி பகுதியை சேர்ந்த அசோக்குமார் (30) என்பது தெரிந்தது. அவர்களை நேற்று கைது செய்தனர். குமார் மீது ஒரு கொலை வழக்கு உள்ளது. இவர்களிடம் இருந்து ஆட்டோ, செல்போனை பறிமுதல் செய்தனர்.