பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இருந்து சிவகாசி நோக்கி சென்ற அரசு பஸ்சை குடி போதையில் ஓட்டிய டிரைவர் இருக்கையிலேயே மட்டையாகி சரிந்தார். 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். கைது செய்யப்பட்ட டிரைவரை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர். விருதுநகர் மாவட்ட அரசு போக்குவரத்து கழக பணிமனைக்குட்பட்ட அரசு பஸ் ஒன்று நேற்று காலை சிவகாசியில் இருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சி நோக்கி புறப்பட்டது. பொள்ளாச்சியை வந்தடைந்த பின்னர் அந்த பஸ் பொள்ளாச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து மீண்டும் சிவகாசி நோக்கி புறப்பட்டது. இந்த பஸ்ஸை டிரைவர் அருள் மூர்த்தி என்பவர் ஓட்டி சென்றார்.
மது குடித்துவிட்டு அருள்மூர்த்தி பஸ் ஓட்டியதாக கூறப்படுகிறது. அந்த பஸ்ஸில் சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். உடுமலை ரோடு கோமங்கலம் புதூர் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்றபோது, டிரைவர் அருள் மூர்த்தி மது போதையில் இருக்கையிலேயே தள்ளாடினார். மேலும், பஸ்சை இயக்கியபடியே குட்காவையும் நசுக்கியபடி வாயில் வைத்தார். அதன்பிறகு பஸ்சை சரியாக இயக்க முடியாமல் திணறினார். ஒரு கட்டத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டில் இருந்து பஸ் தாறுமாறாக செல்ல ஆரம்பித்தது. பஸ்சில் இருந்த பயணிகள் உயிர் பயத்தில் கூச்சலிட்டனர். அதில் உஷாரான டிரைவர் அருள் மூர்த்தி பஸ்சை பஸ் நிறுத்திவிட்டு டிரைவர் இருக்கையிலேயே மட்டையானார். பஸ்சிலிருந்து பயணிகள் அனைவரும் கீழே இறங்கினர்.
அப்பகுதியில் மக்கள் கூட்டம் கூடியது. இச்சம்பவத்தால் கோமங்கலம் புதூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பரபரப்பு உண்டானது. இதையறிந்த கோமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து அதிகாரிகள் அருள் மூர்த்தியை சஸ்பெண்டு செய்தனர். இதையடுத்து, அரசு பஸ் டிரைவர் அருள் மூர்த்தி மீது கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அருள்மூர்த்தி போதையில் பஸ்சை ஓட்டி சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.