சென்னை: சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளது. சென்னை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் சேவை கடந்த 2015ம் ஆண்டு முதல் மக்கள் பயன்பாட்டுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. டிரைவர் இல்லாத 62 மெட்ரோ ரெயில்கள் தயாரிப்பு பணி ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் நடந்து வருகிறது. அந்த வகையில், முதற்கட்டமாக 3 பெட்டிகள் கொண்ட டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் அடுத்த மாதம் (செப்டம்பர்) சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளது.
இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது; மெட்ரோ ரயில் 2-ம் கட்ட வழித்தடத்தில் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட முதல் ரயில் செப்டம்பர் மாதம் சென்னை பூந்தமல்லியில் உள்ள பணிமனைக்கு கொண்டு வரப்பட்டு மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளாகவும், பெண்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் பிரத்யேக இடங்களும் அமைக்கப்படுகிறது. இந்த ரயில் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் இயக்கப்படும். ஒரு ரயிலில் ஆயிரம் பேர் வரையில் பயணம் செய்யலாம். அந்த வகையில் இடவசதியுடன் தயாரிக்கப்பட்டு வருகிறது.