வால்பாறை : வால்பாறை அருகே ஆற்றில் தவறி விழுந்து பலியான டிரைவர் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ளது குரங்குமுடி எஸ்டேட். இங்குள்ள பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் மூர்த்தி மகன் சதீஷ் (24). டிரைவராக பணியாற்றி வந்தார்.
இவர், நேற்று முன்தினம் இரவு ஸ்டேன்மோர் அருகே உள்ள நல்லகாத்து எஸ்டேட் செல்லும் ஆற்றுப்பாலத்தில் நண்பர்களுடன் நடந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்தார். அவரது நண்பர்கள் இரவு முழுவதும் ஆற்றில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து தகவலறிந்த வால்பாறை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடிய நிலையில் நேற்று காலை 7.30 மணியளவில் அவரது உடலை மீட்டனர். உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.