சென்னை: ஓட்டுநர் மற்றும் கண்டக்டர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வரும் 19ம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும் என விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் நேரடி நியமனம் மூலமாக தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் ஓட்டுநர் உடன் நடத்துநர் பதவிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தவர்களுக்கும், வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக பரிந்துரைக்கப்பட்டு விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளவர்களுக்கும் ஏற்கெனவே விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளவாறு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் வரும் 19ம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தேர்வு நுழைவு அனுமதிச் சீட்டினை (ஹால்டிக்கெட்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுவரை ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யாதவர்கள் மேற்படி இணையதளம் மூலம் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்பட்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு ஹால்டிக்கெட் தபால் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல், இணைய தளம் மூலம் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள் அதில் குறிப்பிட்டுள்ள தொழில் நுட்ப உதவி மைய எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.