கே.வி.குப்பம்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த வேலம்பட்டு கிராமம் கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (40). இவரது மனைவி ப்ரியா (35). தம்பதிக்கு பிரித்தி (10) என்ற மகளும், ரபிஸ்வரன் (5) என்ற மகனும் இருந்தனர். மணிகண்டன் தற்போது வசித்து வரும் வீட்டின் பின்புறமே சுமார் 20 மீட்டர் தொலைவில் புதிதாக மாடி வீடு ஒன்றை கட்டி வந்துள்ளார். வீட்டின் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் குடிநீர் தொட்டி, கழிவுநீர் தொட்டி, கட்டுவதற்காக சுமார் 7 அடி ஆழமுள்ள இரண்டு குழிகளை வெட்டி வைத்துள்ளார்.
சமீபத்தில் பெய்த மழையால் அந்த பள்ளத்தில், மழை நீர் நிரம்பி குட்டை போன்று காட்சியளித்தது. இந்நிலையில், நேற்று மாலை பிரித்தி, ரபிஸ்வரன் ஆகியோர் புதிய வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்தன்ர். நீண்ட நேரம் ஆகியும் இருவரும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, குழந்தைகள் இருவரும் இறந்த நிலையில் தண்ணீரில் சடலமாக மிதந்து கிடந்தனர். இதுகுறித்து லத்தேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.