சென்னை: அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பான குடிநீர் கோரி பச்சையப்பன் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி நுழைவாயில் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர். சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் பச்சையப்பன் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் செயல்படுகிறது. அறக்கட்டளை நிர்வாகத்தில் குழப்பம் நீடித்து வருவதால், சில ஆண்டுகளாக நிர்வாக குழு தேர்தல் நடைபெறவில்லை. எனவே, அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்லூரியில் அடிப்படை வசதிகள் எதுவும் செயல்படுத்த முடியாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
அதேநேரம் கடந்த வாரம் பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியை ஒருவரை அறக்கட்டளையின் செயலாளர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. அதற்கு கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர் அந்த பேராசிரியைக்கு ஆதரவாக அறக்கட்டளை நிர்வாகத்திடம் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அறக்கட்டளை நிர்வாகம் பேராசிரியரை சஸ்ெபண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில், பச்சையப்பன் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் காலை 10 மணிக்கு மேல் தண்ணீர் குடிக்கவும், கழிவறைக்கு செல்லும் மாணவர்களை கல்லூரி நிர்வாகம் மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்திய மாணவர் சங்கம் சென்னை மாவட்ட தலைவர் அருண் தலைமையில் நேற்று பச்சையப்பன் கல்லூரியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மாணவர்கள் தரப்பில், கல்லூரியில் உள்ள அனைத்து பிளாக்குகளிலும் கழிவறை வசதி செய்து தர வேண்டும். கல்லூரி கேன்டீன்களில் பாதுகாப்பான குடிநீர் வசதியை ெசய்து தர வேண்டும். சேதமடைந்த கட்டிடங்களை புதுப்பிக்க வேண்டும். விடுதி உணவக கட்டணத்தை குறைத்து சத்தான உணவு வழங்க வேண்டும் என 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் போராட்டத்தால் கல்லூரியில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனர் துரை தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.