சென்னை: கோடம்பாக்கம், அடையாறு மண்டலங்களில் 24 மணி நேர குடிநீர் விநியோக திட்டத்துக்கு தேவையான விவரங்களை வீடு தேடி வரும் பணியாளர்களிடம் தெரிவிக்க வேண்டும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் 2022-23 மானியக் கோரிக்கையின் போது, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 10வது மண்டலம் (கோடம்பாக்கம்) மற்றும் 13வது மண்டலம் (அடையாறு) ஆகிய பகுதிகளில் தற்போதுள்ள குடிநீர் விநியோக அமைப்பை மேம்படுத்தி 24 மணி நேர குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக ரூ.1958.25 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்’ என அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்டலங்களில் அனைத்து குடிநீர் பகிர்மான வலையமைப்பை வடிவமைத்து மற்றும் செயல்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்காக திட்ட மேலாண்மை ஆலோசகராக ஒடிசா மாநில நீர்க் கழகத்திற்கு, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தால் 2023 ஜூன் 9ம் தேதி பணி ஆணை வழங்கப்பட்டது.
அதை தொடர்ந்து, இந்த திட்டத்திற்கு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் மற்றும் ஒடிசா மாநில நீர்க்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் ஜூலை 20ம் தேதி கையெழுத்தானது. இத்திட்டத்தின் கீழ் பழுதடைந்துள்ள பழைய குடிநீர் குழாய்களை மாற்றியமைத்து, விடுபட்ட தெருக்களில் புதிதாக குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளின் கொள்ளளவு அதிகரிக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில், மேற்கண்ட மண்டல பகுதிகளில் 24 மணி நேர குடிநீர் விநியோக திட்டத்துக்கு தேவையான விவரங்களை வீடு தேடி வரும் பணியாளர்களிடம் தெரிவிக்க வேண்டும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்டலங்களில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு தேவையான விவரங்களை, பொதுமக்கள், தங்கள் வீடுகளுக்கு விவரங்களை சேகரிக்க வரும் ஒடிசா அரசின் நீர் நிறுவனத்தின் பணியாளர்களிடம் தெரிவிக்க வேண்டும். அடையாறு மண்டலம், வார்டு எண்.168 முதல் 180க்குட்பட்ட ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், இந்திரா நகர், கிண்டி, அடையாறு, பெசன்ட் நகர், வேளச்சேரி, தரமணி மற்றும் திருவான்மியூர் ஆகிய பகுதிகளுக்கு தற்போதுள்ள குடிநீர் விநியோக அமைப்பை மேம்படுத்தி 24 மணி நேரமும் குடிநீர் தங்குதடையின்றி விநியோகிக்கப்படும். எனவே, பொதுமக்கள் இத்திட்ட செயலாக்கத்திற்கு தேவையான விவரங்களை சேகரிக்க வரும் களப்பணியாளர்களிடம் விவரங்களை வழங்கி ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.