மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே எடையூர் ஊராட்சி உள்ளது. இங்குள்ள கொக்கிலமேடு உலக மாதா கோயில் தெரு, கெங்கையம்மன் கோயில் தெரு, ராஜிவ் காந்தி தெரு, டாக்டர் அம்பேத்கர் தெருக்களில் 130க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த தெருக்களில் தினமும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிணற்றில் இருந்து மின் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட்டு, பின்னர் தெருவில் உள்ள குழாய்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
அதுவும், குறைந்த நேரம் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால், அப்பகுதி மக்களுக்கு போதுமானதாக இல்லை. அப்படி விநியோகிக்கும் குடிநீர் சில நேரங்களில் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை என கூறப்படுகிறது. குறிப்பாக, உலக மாதா கோயில் தெருவில் பல மாதங்களாக குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது.
இதனால், அங்குள்ள மக்கள் காலி குடங்களை எடுத்துக் கொண்டு பல இடங்களுக்கு சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, எடையூர் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு குடிநீர் பஞ்சத்தை போக்கி உரிய முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.