ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளம் நிம்புனேஸ்வரத்தை சேர்ந்தவர் கருப்பையா மகன் பொற்பனையான் (30). தொழிலாளி. இவரது மனைவி பிரியங்கா (23), டிப்ளமோ நர்சிங் படித்து விட்டு ஆலங்குடியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 14 மாதங்களே ஆகிறது. குழந்தை இல்லை. பொற்பனையான், மது குடிக்கும் பழக்கம் உள்ளவர். பிரியங்காவின் நகைகளை விற்று, தினமும் அவர் குடித்து விட்டு போதையில் வீட்டுக்கு வருவாராம். இதை பிரியங்கா கண்டித்ததால் தகராறு ஏற்பட்டது. கடந்த மாதம் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் தம்பதி இடையே சமரச ேபச்சுவார்த்தை நடந்தது. அப்போது இனி குடிக்க மாட்ேடன் என பொற்பனையான் கூறினாராம். ஆனாலும் நிறுத்தவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று வீட்டின் உத்திரத்தில் சேலையால் பிரியங்காவும், வீட்டின் அருகில் உள்ள சிறிய கொட்டகையில் பொற்பனையானும் தூக்கில் சடலமாக தொங்கினர். தகவலறிந்து டிஎஸ்பி தீபக் ரஜினி, எஸ்ஐ நதியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவருடன் ஏற்பட்ட தகராறில் பிரியங்கா தற்கொலை செய்திருக்கலாம். இதை பார்த்து அதிர்ச்சியில் பொற்பனையானும் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.