சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ஒரு வீட்டிற்கு ரூ.3,50,000 வீதம் மொத்தம் ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அரசால் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு, இதுவரை பயனாளிகளுக்கு வீட்டின் கட்டுமான நிலைக்கு ஏற்ப ரூ.252 கோடி விடுவிக்கப் பட்டுள்ளது. தற்போது மேலும், ரூ.500 கோடி வழங்கப்பட்டு வீடுகளின் கட்டுமானத்திற்கேற்ப பயனாளிகளின் வங்கிகணக்கிற்கு நேரடியாக தொகை விடுவிக்கப்பட்டு வருகிறது. ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தின் கீழ் இந்நிதியாண்டில் ஒரு லட்சம் வீடுகளை சீரமைக்க அனுமதி வழங்கப்பட்டு, தேவைக்கேற்ப சிறு மற்றும் பெரும் பழுது நீக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுநாள்வரை 15,350 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அரசால் ஏற்கனவே, ரூ.150 கோடி வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்சமயம் மேலும் ரூ.450 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சிதிட்டம் – II ன் கீழ், குளங்கள், ஊருணிகள் புனரமைத்தல் உள்ளிட்ட 53,779 பணிகள் கடந்த மூன்றாண்டுகளில் எடுக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில், இத்திட்டத்தின் கீழ் 2,482 கிராம ஊராட்சிகள் 15,695 பணிகள் எடுக்கப்பட்டு, 12,722 பணிகள், முடிக்கப்பட்டுள்ளன. அரசால் ரூ.347.50 கோடி விடுவிக்கப்பட்டு ஒற்றை சாளர வங்கி கணக்கின் மூலம் நேரடியாக தங்கு தடையின்றி ஒப்பந்ததாரர்களுக்கு முடிக்கப்பட்ட பணிகளுக்கான தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து பணிகளும் முழுவீச்சில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.