சென்னை: நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஐந்து, ஆறு மாதத்தில் வர இருப்பதால், ஒரே நாடு ஒரே தேர்தல் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. அது இந்தியாவிற்கு ஒத்து வராது என்று டி.ஆர்.பாலு எம்.பி. கூறினார். தாம்பரத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி மீது ஓராயிரம் குற்றச்சாட்டுகள் உள்ளன. 2700 கோடி ரூபாய் செலவில் மண்டபம் கட்டப்பட்டு அதற்கு பாரத் மண்டபம் என்று பெயர் வைத்தார்கள். இந்தியா என்ற பெயரில் கூட்டணியை நாங்கள் வைத்துள்ளதால் அவர்கள் பாரத் என்ற பெயரை வைத்தார்கள். பாரத் என பெயர் வைத்தார்களே, ஆனால் அந்த பாரத் மண்டபம் தண்ணீர் நிரம்பி வழிந்தது. அங்கு உட்காருவதற்கு கூட இடமில்லை. அந்த அளவிற்கு தண்ணீர் நின்றது. அந்த கட்டிடம் கட்டுவதற்கு திட்டம் போட்டது ஒன்று, ஆனால் திட்டமிட்டபடி கட்டவில்லை. ஒரு ரூபாய் செலவு செய்ய வேண்டிய இடத்தில் மூன்று ரூபாய் செலவு செய்து உள்ளார்கள். 2700 கோடி ரூபாய் செலவு செய்தது வேஸ்ட். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு ஒத்து வராது. ஒரே நாடு ஒரே தேர்தல் விஷயத்தில் அவர்களே தெளிவாக இல்லை. எனவே, அது நடைமுறைக்கு ஒத்து வராது. நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஐந்து, ஆறு மாதத்தில் வர இருக்கிறது, ஒரே நாடு ஒரே தேர்தல் நடப்பதற்கு வாய்ப்பில்லை. அது இந்தியாவிற்கு ஒத்து வராது. இவ்வாறு அவர் கூறினார்.