சென்னை: இங்கிலாந்து நாட்டின் கேம்டன் நகரில், அம்பேத்கர் 1921-22ம் ஆண்டு லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் படிக்கும்போது வாழ்ந்த இல்லத்தை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பார்வையிட்டார். அப்போது அவர் பேசியதாவது; அம்பேத்கருக்கு சமமாக இந்தியாவில் யாரையும் சொல்லமுடியாது என்று சொன்னார் தந்தை பெரியார். இந்தியாவிலேயே முதன்முதலாக அம்பேத்கர் பெயரில் அரசு கல்லூரியை கொண்டு வந்தது திமுக தலைமையிலான அரசு. சென்னை சட்ட பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் பெயரை சூட்டியவர் கலைஞர். மராத்வாடா பல்கலைக் கழகத்துக்கு அம்பேத்கர் பெயரை சூட்டவேண்டும் என்று தமிழ்நாட்டில் இருந்து தந்தி அனுப்ப வேண்டும் என்று கலைஞர் உத்தரவிட்டார். பல்லாயிரக்கணக்கான தந்திகள் போனதால் அம்பேத்கர் பெயரைச் சூட்டினர்.
அம்பேத்கரின் ‘சாதியை ஒழிக்கும் வழி’ என்ற நூலை 1936ம் ஆண்டு தமிழில் மொழிபெயர்த்து புத்தகம் போட்ட இயக்கம் திராவிட இயக்கம். அந்தளவுக்கு அம்பேத்கரை விதைத்தது திராவிட இயக்கம்தான் என்பதை மறந்துவிட முடியாது. நீங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து எங்களுக்குத் தலைமை வகிக்க வேண்டும்” என்று சிலர் கோரிக்கை வைத்த போது, “உங்களுக்குத் தான் பெரியார் ராமசாமி இருக்கிறாரே? அவரை வைத்து இயக்கம் நடத்துங்கள்” என்று சொன்னவர் அம்பேத்கர். 1969ம் ஆண்டு முதன்முதலில் முதலமைச்சரான கலைஞர்தான் ஆதிதிராவிடர் நலத்துறையையும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையையும் தனித்தனியே உருவாக்கினார்.
பட்டியலின மக்களுக்கு 18 விழுக்காடும் பழங்குடியினருக்கு 1 விழுக்காடும் பிற்படுத்தப்பட்டோருக்கு 31 விழுக்காடும் வழங்கியவர் கலைஞர். அம்பேத்கர் கனவை செயலாக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்படுகிறது.
நமது அரசியலமைப்புச்சட்டத்தை வகுத்துத்தந்த அம்பேத்கரை பின்பற்றி, சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம். சக மனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணாமல், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க என்றும் உறுதி ஏற்போம்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.