சென்னை: திராவிட மாடல் என்றாலே சிலருக்கு வயிறு எரிகிறது; திராவிட மாடல் என்றாலே அச்சப்படுகின்றனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார். அப்போது; அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள். ஆளுநர் வருகிறார்; உரையாற்றாமல் சென்று விடுகிறார் என்பதால் சிறுபிள்ளைத்தனமானது என்றேன். ஆளுநரை பொறுத்தவரை தமிழ்நாடு சட்டமன்றம் விசித்திரமான காட்சிகளை பார்த்து வருகிறது.
ஆளுநர் வருகிறார், உரையாற்றாமல் போய்விடுகிறார்; அதனால்தான் ஆளுநரின் செயல் சிறுபிள்ளைத்தனமானது என்றேன். திட்டமிட்டு விதிமீறலில் செய்வதில்தான் ஆளுநர் குறியாக இருக்கிறார். அரசியலமைப்பு சட்டப்படி ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் சட்டப்பேரவையில் உரையாற்ற வேண்டும். அபத்தமான காரணங்களைக் கூறி சட்டமன்றத்தில் உரையை வாசிக்காமல் ஆளுநர் சென்றார். பேரவை தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்து, முடியும் போது தேசிய கீதம் பாடுவது வழக்கம். தமிழ்நாடு வளர்ந்து வருவதை கண்டு ஆளுநரால் ஜீரணிக்க முடியவில்லை.
அரசியல் உள்நோக்கத்துடன் ஆளுநர் செயல்படுவதை இதுவரை சட்டமன்றம் கண்டது இல்லை. விடியல் தரப்போவது என்று கூறியது மக்களுக்குத்தான், எதிர்க்கட்சிகளுக்கு அல்ல. நான் செல்லும் இடமெல்லாம் கூடும் மக்களின் எழுச்சிதான் விடியலின் அடையாளம். விடியல் பயணம் மகளிர் சேமிப்பை அதிகரித்து உள்ளது. மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை பெறும் மகளிரின் முகங்களை பாருங்கள், அதுதான் விடியல் ஆட்சி. அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வி செல்ல முடியாத மாணவிகளுக்காக கொண்டு வரப்பட்டதுதான் புதுமைப் பெண் திட்டம். புதுமைப்பெண் திட்டம் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டத்தை விரிவுபடுத்தி உள்ளோம். தமிழ்நாடு மாணவிகள் என்னை அப்பா… அப்பா… என்று அழைக்கும் போது அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். புதுமைப்பெண் திட்டம் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவிகள் எண்ணிக்கை 30% அதிகரித்துள்ளது. அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டத்தை விரிவுபடுத்தி உள்ளோம். விடியல் பயணம், காலை உணவு, புதுமைப் பெண் உள்ளிட்ட திட்டங்களை எல்லாம் வெட்டிச் செலவு என எதிர்க்கட்சித் தலைவர் நினைக்கிறாரா?
டங்ஸ்டன் விவகாரத்தை மீண்டும் மீண்டும் கூறி மதுரை மக்களை குழப்ப நினைக்கிறார்களா? திராவிட மாடல் என்றாலே சிலருக்கு வயிறு எரிகிறது; திராவிட மாடல் என்றாலே அச்சப்படுகின்றனர். ஒவ்வொரு திட்டங்களையும் சொல்லிக் கொண்டே போனால் எதிர்க்கட்சியினர் அதிகம் வேதனை அடைவார்கள். எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. அனைத்து மக்களின் வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. இந்தியாவின் வளர்ந்த பொருளாதாரமாக தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது
ரவுடிகளின் மீது தயவு தாச்சனம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குற்றங்கள் பெருமளவு தடுக்கப்படுகிறது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்தியாவில் பாதுகாப்பு மிக்க மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. பெரும்பாலான கொலைகள் குடும்ப பிரச்சினை காதல் விவகாரம் பணம் கொடுக்கல் வாங்கல் நிலப்பிரச்சினை தனிப்பட்ட முன்விரோதம் வாய் தகராறு போன்ற காரணங்களுக்காக நடந்துள்ளது. அரசியல் காரணங்கள் சாதிய , மதக் கொலைகள் முலையிலேயே கிள்ளி, குறைக்கப்பட்டுள்ளது. அதிமுக கருப்பு சட்டை அணிந்து வந்த போது எனக்கு கோபம் இல்லை சிரிப்புதான் வந்தது.
பேரிடர் நிதியை கூட தராமல் உள்ள ஒன்றிய அரசை கண்டித்து நீங்கள் கருப்பு சட்டை அணிந்து இருந்தால் உங்களை நான் பாராட்டி இருப்பேன். ஆளுநரைக் கண்டித்து கருப்பு சட்டை அணியும் துணிச்சல் உங்களுக்கு ஏன் இல்லை? இருட்டு அரசியல் செய்பவர்களுக்கு கருப்பு சட்டை அணிய தார்மீக உரிமை இல்லை. பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் ஒன்றிய அரசு வழங்கவில்லை. தேசிய உயர்கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படுத்த வேண்டிய திட்டங்களும் தேசிய கல்வி கொள்கையால் முடங்கியுள்ளது. மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புக்கு மிகவும் சொற்பமான தொகையை தான் ஒன்றிய அரசு விடுவித்தது.
ஒன்றிய அரசு வீடுதோறும் குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.4,142 கோடியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும், ஆனால் ரூ.732 கோடி தான் வழங்கியுள்ளது. ஒன்றிய அரசு தனது திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியை தமிழ்நாடு அரசு மீது திணிப்பதால் மாநில அரசின் முன்னுரிமை திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியை அளிக்க முடியாத நிலை உள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரிக்க மதுரை திருநெல்வேலி கோயம்புத்தூர் சேலம் திருச்சி சென்னை சுற்றுப்புற பகுதியில் 7 தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும். ரூ.3,750 கோடியில் நகர்ப்புற சாலைகள் மேம்படுத்தப்படும். மாவட்டந்தோறும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்படும்.
தேர்தலுக்கு முன்பாக கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டோம். இன்னும் சில நிறைவேற்றப்பட வேண்டும். 3 ஆண்டுகளில் 12,000 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன். அடுத்து அமையும் ஆட்சி திமுக ஆட்சிதான்; அதில் எங்களுக்கு இம்மியளவும் சந்தேகம் இல்லை, மக்களுக்கும் சந்தேகம் இல்லை. ஓய்வுக்கே ஓய்வு கொடுத்தவரின் மகன் நான், கலைஞர் பாதையே வெற்றிப் பாதை என செயல்பட்டு வருபவன் நான். பெரியார், அண்ணா உருவாக்கிக் கொடுத்த கொள்கையை காப்பேன் என்று கூறினார்.