சென்னை: திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை உலகம் அறிந்திருக்கிறது. மக்கள் நம் பக்கம் இருப்பதால்தான் மாற்று முகாம் கலக்கத்தில் பேசுகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கோவையில் சென்ற இடமெல்லாம் மகிழ்ச்சியும் எழுச்சியும் நிறைந்திருந்ததுபோலவே, நவம்பர் 9, 10 ஆகிய நாட்களில் விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொண்ட பயணமும் முழுமையான வெற்றியாக அமைந்தது.
விருதுநகரில் மாபெரும் மக்கள் நலத்திட்ட விழாவுக்குச் சென்றேன். ஏறத்தாழ 40 ஆயிரம் பேருக்குப் பட்டா வழங்கும் விழா என்பதால், பயனாளிகள் அனைவருக்கும் பட்டா கிடைத்ததை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட அமைச்சர்களிடம் தெரிவித்தேன். நலத்திட்ட விழா நிறைவடைந்தபோது, அத்தனை பேருக்கும் பட்டா உள்ளிட்ட பயன் தரும் உதவிகள் முறையாகப் போய்ச் சேர்ந்திருப்பதை உறுதி செய்தனர். இதனைப் பொறுக்க முடியாமல்தான் அரசியலில் எதிர்முகாமில் இருப்பவர்கள் வன்மத்துடன் வார்த்தைகளை வெளிப்படுத்துகிறார்கள்.
எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தன் நிலை மறந்து விமர்சிக்கிறார். கலைஞர் பெயரிலான திட்டங்களும், கட்டிடங்களும் மக்களுக்குப் பெரும்பயன் அளிப்பதைக் கண்டு பொறுக்க முடியாமல், கலைஞர் பெயரை வைப்பதா என அநாவசியமாகப் பொங்குகிறார். தலைவர் கலைஞரைப் போலவே மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட தலைவர்களைப் போற்றவும் இந்த அரசு தவறியதில்லை. அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தையும் முன்பை விடச் சிறப்பாக நடத்தி வருவது திராவிட மாடல் ஆட்சிதான்.
இந்த அடிப்படை கூட எதிர்க்கட்சித் தலைவருக்கு எப்படிப் புரியாமல் போனதோ, பண்பாடே இல்லாமல் அநாகரிகமாகப் பேசுவதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்களைப் போல எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருப்பவர் பேசுவதையும், இப்படிப்பட்டவருடன் ஜனநாயக மாண்புமிக்க சட்டமன்றத்திலும் விவாதிக்க வேண்டியிருக்கிறதே என்பதையும் எண்ணி வேதனைப்படுகிறேன். வன்மம் கக்கும் வயிற்றெரிச்சல்காரர்களைக் கடந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.
மக்கள் நம் பக்கம் இருப்பதால்தான் மாற்று முகாம் கலக்கத்தில் என்னன்னவோ பேசுகிறது. ஆனால், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் என்ன என்பதை உலகம் அறிந்திருக்கிறது. கோவை, விருதுநகர் மாவட்டங்களைத் தொடர்ந்து நவம்பர் 14, 15 தேதிகளில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறேன். ஒவ்வொரு மாவட்டச் சுற்றுப் பயணத்திலும் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். அதைப் பார்த்துச் சிலர் வயிறு எரிகிறார்கள். ஏதேதோ பேசுகிறார்கள். அவர்கள் பேசட்டும். நாம் சாதிப்போம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
* உள்ளம் நெகிழ்ந்தேன்.. கண்ணீர் துளிர்த்தது..
விருதுநகரில் ஆய்வுப் பணிகளை முடித்து அன்னை சத்யா அரசு காப்பகத்தில் உள்ளவர்களைச் சந்திக்கப் புறப்பட்டேன். அங்குள்ள குழந்தைகளுக்கு என்ன வாங்கலாம் என யோசித்து, ஒரு இனிப்பகத்திற்குச் சென்று, நானே ஒவ்வென்றையும் பார்த்து, அங்குள்ள தின்பண்டங்களின் தரம், சுவை குறித்து கேட்டறிந்து, நானே ஒவ்வொன்றையும் தேர்வு செய்து வாங்கினேன். அதுபோல நல்ல பழங்களையும் வாங்கிக் கொண்டேன். காப்பகத்திற்குச் சென்றபோது மாலை நேர யோகா வகுப்பு நடந்துகொண்டிருந்தது.
குழந்தைகள் தங்கள் பயிற்சியை முடிக்கட்டும் என விடுதிக் காப்பாளரிடம் சொல்லிவிட்டு காத்திருந்தேன். யோகா பயிற்சி முடிந்ததும், அங்கிருந்த குழந்தைகளைச் சந்தித்தேன். காப்பாளர் என்னை அவர்களிடம் காட்டி, “இவர் யார் தெரிகிறதா?”என்று கேட்டபோது, “அப்பாஞ்” என்று அவர்கள் சொன்னதைக் கேட்டு உள்ளம் நெகிழ்ந்தேன். கண்ணீர் துளிர்த்தது.
அங்கிருந்த குழந்தைகளில் ஒருவர் நன்றாகப் பேசுவார் என்று சொன்னதையடுத்து, அவர் பேசத் தொடங்கினார். நான் வாங்கிச் சென்ற இனிப்புகளையும் பழங்களையும்விட நன்றி கலந்த அன்புடன் வெளிப்பட்ட அந்தக் குழந்தையின் பேச்சு அத்தனை சுவையாக இருந்தது. அங்கிருந்த குழந்தைகள் அனைவருமே என்னைத் தங்களின் தந்தையாகவே பார்த்து அன்பை வெளிப்படுத்தினர். வாழ்வின் பெரும்பயனை அனுபவித்த உணர்வைப் பெற்றேன் என்றார் முதல்வர்.