மதுரை: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக மாஜி அமைச்சர்கள் முன்னிலையில் பெரியார், அண்ணாவை அவதூறு செய்யும் வகையில் வீடியோ ஒளிபரப்பானது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என திராவிட இயக்க உணர்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்து முன்னணி சார்பில் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. இந்த மாநாடு இந்து முன்னணியின் பெயரில் நடத்தப்பட்டாலும், முழுக்க, முழுக்க பாஜவினரே பணியாற்றினர். இந்த மாநாட்டிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், அவரது சார்பில் மாஜி அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார், கடம்பூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி மற்றும் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில், ‘அதர்மம் ஒழிக்க..’ என்ற கூறியவாறு பெரியார், அண்ணா ஆகியோரது படங்களை திரையில் காட்டி அவதூறு செய்தனர். இதனை பார்த்த அதிமுக மாஜி அமைச்சர்களும், எம்எல்ஏவும் எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல் அமைதியாக இருந்தது, தமிழ் ஆர்வலர்களிடமும், திராவிட பற்றாளர்களிடமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திராவிட இயக்க சிந்தனையாளர்கள் கூறும்போது, ‘‘மதம் சார்ந்த இந்து முன்னணி அமைப்பின் மாநாட்டில் அதிமுகவை சேர்ந்த மாஜி அமைச்சர்கள் பங்கேற்றதே முதலில் தவறு. அந்த மாநாட்டில் தாங்கள் முன்னிறுத்தி அரசியல் செய்து வரும் தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணாவை அவதூறாக பேசி வீடியோ ஒளிபரப்பானபோது எதுவுமே தெரியாதவர்களைப் போல, அமைதியாக மாஜி அமைச்சர்கள் உட்கார்ந்திருந்தது கடும் கண்டனத்திற்கு உரியது.
பெரியார், அண்ணா வழியில் செயல்படும் கொள்கைப் பிடிப்பாளர்களாக அவர்கள் இருந்திருந்தால், உடனடியாக அந்த மேடையிலேயே தங்கள் எதிர்ப்பை, கண்டனத்தை அவர்கள் பதிவு செய்திருக்க வேண்டும். இந்து முன்னணி மாநாட்டில் பங்கேற்ற அதிமுக மாஜி அமைச்சர்கள், எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள் தங்களின் செயலுக்காக கட்சித் தொண்டர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இந்து முன்னணியின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். பெரியாரையும், அண்ணாவையும் வைத்து அரசியல் செய்யும் நிலையில் இவர்கள் அரசியலை விட்டு விலக வேண்டும்’’ என்றனர்.
‘தந்தை பெரியார், அண்ணா குறித்த விமர்சனங்களை தவிர்த்திருக்கலாம்’: வலிக்காமல் சொல்லும் ராஜேந்திரபாலாஜி
பாஜவினரின் முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா பற்றி இழிவுபடுத்தி வீடியோ வெளியான நிகழ்வு திராவிட சித்தாந்த பின்னணியில் உருவான அதிமுகவின் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. குறிப்பாக, அண்ணாவின் பெயரை கட்சியின் பெயரில் வைத்திருக்கும் அதிமுகவினர், முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாவின் பெயர் அவமரியாதை செய்யப்பட்டதை தட்டிக் கேட்காமல், குறைந்தபட்சம் கண்டனம் கூட தெரிவிக்காமல் இருந்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. பாஜ உடன் கூட்டணி அமைத்ததே தவறு, இதில் இந்து முன்னணி நடத்தும் மாநாட்டிற்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன, இவ்வளவு தூரம் இறங்கிச் செல்வது கட்சிக்கு அவமானம் என்று முன்னாள் அமைச்சர்களை மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் கடிந்து கொண்டனர்.
இந்நிலையில் அதிமுக தொண்டர்களை சரிக்கட்டுவதற்காக விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணாவை விமர்சனம் செய்யும் வகையில் வீடியோவை ஒளிபரப்பியது வருத்தமளிக்கிறது.
மறைந்த முன்னாள் தலைவர்களை விமர்சிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டதை தவிர்த்திருக்கலாம். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் இல்லையெனில் என்னை போன்ற நபர்கள் அரசியலுக்கு வந்திருக்க முடியாது. இன்றைய அரசியல் சூழலில் மறைந்த தலைவர்களின் நல்ல நிகழ்வுகளை பற்றி பேசுவதுதான் சாலச் சிறந்தது. முன்னாள் தலைவர்களின் ஒரு போக்கு சிந்தனைகளையும் அந்த நேரத்தில் எடுத்த முடிவுகளையும் பற்றி தற்போது விமர்சனம் செய்வது தேவையற்ற விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது’’ என்றார்.
பாஜவுக்காக அண்ணா மீது குற்றச்சாட்டு: தொண்டர்கள் கண்டனம்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறுகையில், ‘‘அறிஞர் அண்ணாவின் பேச்சு, செயல், எழுத்துக்கள் சிலரின் மனதை புண்படுத்தி இருக்கலாம், அதனுடைய வெளிப்பாடாக வீடியோ வெளியிட்டு இருக்கலாம். ஒரு நிகழ்ச்சியில் நடக்கின்ற நல்ல நிகழ்வுகளைப் பற்றி பேசுவோம். அதில் நடந்த ஒரு நிகழ்வைப் பற்றி பேசி ஒட்டுமொத்த மாநாட்டின் நல்ல கருத்துக்களை புறக்கணிக்க முடியாது’’ என்று தெரிவித்தார்.
இந்த கருத்து அதிமுக தொண்டர்களை மேலும் கொந்தளிக்க செய்துள்ளது. ‘‘விளக்கம் அளிக்கிறேன் என்ற பெயரில், அண்ணாவின் பேச்சு புண்படுத்தி இருக்கலாம் என்று பாஜவிற்கு முட்டு கொடுக்கும் வகையிலேயே பேசி வருகிறார். அண்ணாவின் பேச்சு யாரை புண்படுத்தியது? பிற்போக்கு சிந்தனை உடையவர்களைத்தான் புண்படுத்தியது, அண்ணாவின் கொள்கைகளில் எந்த தவறும் இல்லை’’ என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.