மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே உள்ள ஒரத்தி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் தேரோட்டத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் தேர் முழுமையாக எரிந்து சேதம் அடைந்துள்ளது. மதுராந்தகம் அருகே உள்ள ஒரத்தி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் கொடியேற்றம் கடந்த 2ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் திருவிழாவை மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வந்துள்ளனர். இத்திருவிழா 22 நாட்கள் தொடர்ந்து நடைபெறுவது வழக்கம் ஆகும். நேற்று (மே.19) நான்காம் திருவிழா நடைபெற்று வந்துள்ளது.
இதில் இரும்பினால் செய்யப்பட்ட தேர் மூலம் தேரோட்டம் நடைபெற்று வந்தது. தேர் வலம் வரும்போது உயர் மின்னழுத்த மின்சார கம்பி மீது உரசியதில் தேர் முழுமையாக எரிந்ததுள்ளது. தேரோட்டத்தின்போது, உயர் மின்னழுத்த கம்பியில் தேர் உரசியதில் ஏற்பட்ட தீ விபத்தில் ராம்குமார் (24) என்பவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து ஒரத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.