Thursday, February 22, 2024
Home » அதிமுகவை வைத்து பாஜ எத்தகைய நாடகத்தை நடத்தினாலும் திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது: 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்

அதிமுகவை வைத்து பாஜ எத்தகைய நாடகத்தை நடத்தினாலும் திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது: 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்

by Francis

சென்னை: அதிமுகவை வைத்து பாஜ எத்தகைய நாடகத்தை நடத்தினாலும் திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது என்பது உறுதி. நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்: அயல்நாட்டில் இருந்தாலும் நினைவு முழுவதும் அன்பு உடன்பிறப்புகளாகிய நீங்களே நிறைந்திருக்கிறீர்கள். இந்த மடலை நான் எழுதும்போது, உடன்பிறப்புகளாம் உங்ளுக்கு இப்போது நேரம் மதியம் 12 மணி. உங்களில் ஒருவனான எனக்கு காலை 7.30 மணி. ஆம்.. இந்தியாவிலிருந்து நாலரை மணி நேர வேறுபாடு கொண்ட ஐரோப்பாவின் ஸ்பெயின் நாட்டில் இருக்கிறேன், தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக! இருப்பது ஸ்பெயினில் என்றாலும், நினைப்பெல்லாம் தமிழ்நாட்டில் தான். நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் திமுகவின் முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு தலைமையிலான நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அடங்கிய இந்தக் குழுவினர், அண்ணா அறிவாலயத்தில், நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திமுகவின் நிர்வாகிகளையும் சந்தித்துத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர். தினமும் 4 தொகுதிகள் வீதம் இதுவரை 22 தொகுதிகளைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் ஒவ்வொன்றும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டமாக மட்டுமில்லாமல் திமுகவினர் சுட்டிக்காட்டும் பிரச்னைகளுக்கும், அவர்களின் கோரிக்கைகளுக்கும் உடனுக்குடன் தீர்வு காணும் கூட்டமாகவும் இருப்பது திமுக நிர்வாகிகளை மிகுந்த உற்சாகத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது என்பதை அறிகிறேன்.
ஜனவரி 26 அன்று, திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. முன்னெடுத்து நடத்திய “வெல்லும் சனநாயகம்” மாநாட்டில் நான் குறிப்பிட்டதுபோல, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜ பூஜ்ஜியம்தான். அதிமுகவை வைத்து பாஜ எத்தகைய நாடகத்தை நடத்தினாலும் திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது என்பது உறுதி. மக்களிடம் செல் என்றார் அண்ணா.

உங்களில் ஒருவனான நான் அதை வழிமொழிவதுடன், ‘மக்களிடம் செல். மக்களிடம் சொல்’ என்று ஒவ்வொரு உடன்பிறப்பையும் கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு குடும்பமும் திமுக ஆட்சியின் சாதனைகளால் பெற்றிருக்கும் பயன்களை உணர்த்துங்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலைவிடவும் கூடுதலான உழைப்பை வழங்கி, கூடுதலான வாக்கு வித்தியாசத்தில், கடந்த முறை மிச்சம் வைத்த ஒற்றைத் தொகுதியையும் சேர்த்து நாற்பதுக்கு நாற்பது என்ற முழு வெற்றியை உறுதி செய்யுங்கள். நம்மைத் திசைதிருப்ப அவதூறுகளைப் பரப்புவதில் பா.ஜ.க.வும் அதிமுகவும் சளைத்தவையல்ல. பொய் வழக்குகளின் பேரில் தங்களை எதிர்க்கும் ஜனநாயக சக்திகள் மீது மிரட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஒன்றே ஒன்றிய பாஜ அரசின் பத்தாண்டுகால சாதனையாக இருப்பதால் திமுகவை மிரட்டிப் பார்க்கும் வகையிலான ஊடகப் பரபரப்புக்கான செயல்பாடுகள் இருக்கும். எதற்கும் அஞ்சாத இயக்கம் தான் திமுக என்பதைக் களத்தில் ஆற்றும் பணிகள் மூலமாக அவர்களுக்குப் புரிய வைப்போம். நாடாளுமன்றத்தில் இடைக்காலப் பட்ஜெட்டை பாஜ அரசு தாக்கல் செய்திருக்கிறது. அதிலும்கூட தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளது. முழுமையான பட்ஜெட்டை அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்தியா கூட்டணி அரசு தாக்கல் செய்யும். மாநிலங்களின் நலன்களும் உரிமைகளும் பாதுகாக்கப்படும். அதற்கேற்ற வகையில் வெற்றி பெறுவோம் என அண்ணா நினைவு நாளில் சூளுரைப்போம். அமைதிப் பேரணியில் அன்பு உடன்பிறப்புகள் அலைஅலையாய் வங்கக்கடல் நோக்கிச் செல்கின்ற நேரத்தில், இங்கே அண்ணா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி உங்களில் ஒருவனான நானும் சூளுரை ஏற்கிறேன். அண்ணா வழியில் அயராது உழைப்போம்! ஆதிக்க ஒன்றிய அரசை அகற்றியே தீருவோம். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

 

You may also like

Leave a Comment

5 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi