புதுடெல்லி: மாணவர்கள் நலன் கருதி, பொதுத் தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் இருமுறை நடத்தப்படும் என புதிய தேசிக் கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. இதை அமல்படுத்தும் வகையில், வரும் 2026 ஆம் கல்வியாண்டு முதல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை இருமுறை நடத்துவதற்கான வரைவு விதிமுறைகளை சிபிஎஸ்இ நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி, முதல்கட்ட பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 17 முதல் மார்ச் 6ம் தேதி வரையிலும் இரண்டாம் கட்ட பொதுத் தேர்வுகள் மே 5ம் தேதி முதல் மே 20ம் தேதி வரையிலும் நடத்தப்படும்.
இந்த வரைவு விதிகள் குறித்து பொதுமக்கள் வரும் மார்ச் 9ம் தேதி வரையிலும் கருத்துக்களை தெரிவிக்கலாம். அதன் பிறகு விதிமுறைகள் இறுதி செய்யப்படும். இரு பொதுத் தேர்வுகளும் முழு பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் என்றும், இரு தேர்வுக்கும் ஒரே தேர்வு மையம் ஒதுக்கப்படும் என்றும், எந்த சூழலிலும் சிறப்புத் தேர்வுகள் நடத்தப்படாது என்றும் சிபிஎஸ்இ அதிகாரிகள் கூறி உள்ளனர்.