ஊட்டி: வரதட்சணை கொடுமையால் ஊட்டியில் காபியில் சயனைடு கொடுத்து இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவர், மாமியார் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சயனைடு வாங்கி கொடுத்தவர் நேற்று கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம், ஊட்டி, காந்தல் பென்னட் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் ஜவஹருல்லா (50). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி யாஸ்பின் (47). இவர்களுக்கு இம்ரான் (27), முக்தார் (24) என இரு மகன்கள்.
இம்ரானுக்கும், ஊட்டி வண்டிச்சோலை பகுதியை சேர்ந்த அப்துல்சமதுவின் மகள் ஆஷிகா பர்வீனுக்கும் (22) கடந்த 2021 ஜூலை 15ம் தேதி காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில் மாமியார் யாஸ்பினுக்கும், மருமகள் ஆஷிகா பர்வீனுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்னை இருந்துள்ளது. கடந்த ஜூன் 23ம் தேதி வாயில் நுரை தள்ளியவாறு மர்மமான முறையில் ஆஷிகா பர்வீன், கணவர் வீட்டில் இறந்து கிடந்தார்.
இது தொடர்பான தகவலின் பேரில் ஊட்டி மேற்கு போலீசார் ஆஷிகா பர்வீனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதனால் சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில் ஆஷிகா பர்வீனுக்கு காபியில் விஷம் கலந்து கொடுத்தது தெரியவந்தது.
புனேவிற்கு அனுப்பப்பட்ட உடற்பாகங்கள் ஆய்வில் ஆஷிகா பர்வீனின் உடலில் சயனைடு கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஆஷிகா பர்வீனின் கணவர் இம்ரான், மாமியார் யாஸ்மின், மைத்துனர் முக்தார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் யாஸ்மின் குடும்பத்தினர் புதிதாக இடம் வாங்குவதற்காக ஆஷிகா பர்வீனிடம் பெற்றோரிடம் சென்று ரூ.20 லட்சம் வரதட்சணை வாங்கி வருமாறு கேட்டு தொந்தரவு கொடுத்துள்ளனர்.
பணம் வாங்கிவர மறுத்ததால் ஊட்டி மெயின் பஜார் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் இருந்து நகைக்கு பாலீஸ் போடும் சயனைடு வாங்கி வந்து காபியில் கலந்து ஆஷிகா பர்வீனுக்கு கொடுத்துள்ளனர். அதனை குடித்து ஆஷிகா பர்வீன் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. நகைக்கடைகளில் நகை பாலிஸ் செய்வதற்கு சயனைடு பயன்படுத்தப்படுகிறது. இந்த சயனைடு அவ்வளவு எளிதாக யாருக்கும் கிடைக்காது.
இதை சாப்பிட்டால் சாப்பிட்டவர் ஒரு சில நிமிடங்களில் உயிரிழந்து விடுவார். இதனால் சயனைடு விஷத்தை வாங்கி கொடுத்தது யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நகைக்கடையில் இருந்து சயனைடு வாங்கி கொடுத்தது யாஸ்பினின் குடும்ப நண்பரான ஊட்டியை சேர்ந்த காலிப் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். காலிப்பிற்கு சயனைடு கொடுத்த நகைக்கடை எது என்பது குறித்து விசாரணை நடக்கிறது.