Tuesday, April 23, 2024
Home » தேர்தல் தேதி அறிவிப்பில் சந்தேகம்: தலைவர்கள் குற்றச்சாட்டு

தேர்தல் தேதி அறிவிப்பில் சந்தேகம்: தலைவர்கள் குற்றச்சாட்டு

by Ranjith

சுதந்திரமாக செயல்படுகிறதா ஆணையம்: – செல்வப்பெருந்தகை
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பாதயாத்திரை நிறைவு விழா மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று காலை பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து மும்பை புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: ராகுல்காந்தி நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக தமிழ்நாட்டில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து அதற்கான சுற்றுப்பயண திட்டங்கள் வகுப்பதற்காக நாங்கள் மும்பை செல்கிறோம்.

தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக – காங்கிரஸ் இந்தியா கூட்டணி கடந்த நாடாளுமன்றத் தேர்தலை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெறும். முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடக்கப்போகிறது என்பது மோடிக்கு எப்படி முன்பே தெரிந்தது. அதனால் தான் அவர் தமிழ்நாட்டை மையமாக வைத்து, முதலில் பிரசாரம் செய்து கொண்டிருந்தாரா. இதையெல்லாம் பார்க்கும் போது, தேர்தலை தேர்தல் ஆணையம் சுதந்திரமாக, சுயமாக நடத்துகிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு எழும்புகிறது. இதற்கெல்லாம் மோடி பதில் சொல்லியாக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* சங்பரிவார்கள் ஆலோசனைப்படி…- திருமாவளவன்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், ராகுல்காந்தியின் நடைபயணத்தின் நிறைவு விழா மற்றும் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று காலை விமானத்தில் சென்னையில் இருந்து மும்பை புறப்பட்டு சென்றார். அப்போது அவர் அளித்த பேட்டி: இந்திய தேர்தல் ஆணையத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதனால் தான் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை தாமதமாக அறிவித்திருக்கிறது.

மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் 7 கட்டங்கள், 5 கட்டங்களாக தேர்தல்கள் நடக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக, ஒரே நாளில் தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட தேர்தலுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும், இடையே 45 நாட்கள் இடைவெளிகள் உள்ளன. இவ்வளவு நாட்கள் இடைவெளி எதற்காக. நாடு முழுவதும் 3 கட்டங்களாக தேர்தலை நடத்தி முடிக்க முடியும். கடந்த காலங்களில் ஒரே நாளில், நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல் இரண்டையும் சேர்த்து நடத்திய நாடு இந்தியா.

அதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் நமது நாட்டில் உள்ளன. இவைகள் எல்லாம் தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன. ஒரு சில வடமாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல்நடத்த வேண்டிய காரணம் என்ன. தேர்தல் ஆணையம் சுயமாக சுதந்திரமாக இயங்காமல், சங்பரிவார் அமைப்புகளின் ஆலோசனைப்படி செயல்படுகிறது என்ற குற்றம்சாட்டுகிறோம். எதுவாக இருந்தாலும் நாங்கள் மக்களை நம்பி களம் இறங்குகிறோம். இந்த தேர்தலில், சூது சூழ்ச்சியில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு 100% வாக்குப்பதிவு அவசியம். நாங்கள் தேர்தல் ஆணையத்தை நம்பவில்லை,

* தேதி அறிவிப்பும் மோடி வருகையும்: – ஜவாஹிருல்லா
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ நேற்று வெளியிட்ட அறிக்கை: பிரதமர் மோடி கடந்த சில வாரங்களில் மட்டும் ஐந்து முறை தமிழகத்திற்கு வந்துள்ளார். பெருமழை வெள்ளத்தில் தமிழகம் மூழ்கித் தவித்தபோது கூட ஆறுதல் சொல்ல வராதவர் தமிழ்நாட்டிற்கான நிவாரண உதவியை சிறிதளவு நீட்டாதவர் இந்த முறை தொடர்ச்சியாக 5 முறை தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதும் அவருடைய இறுதி வருகையின் போது தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் தேதியை அறிவிப்பதும் அதில் முதல் கட்ட தேர்தல் தமிழ்நாட்டில் என்று அறிவிப்பதும் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.

இதைத் தற்செயலானதாக பார்க்க முடியவில்லை. இது திட்டமிட்டு நடந்த நிகழ்வாகவே பார்க்க முடிகின்றது. தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கின்ற ஏப்ரல் 19ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகின்றது. வெள்ளிக்கிழமை முஸ்லிம்களுக்கு ஒரு புனிதமான நாள். வேறு பல நாட்கள் இருக்கும் பொழுது முஸ்லிம்கள் அதிகமாக வாக்களித்து விடக்கூடாது என்ற எண்ணத்திலேயே வெள்ளிக்கிழமையை தேர்ந்தெடுத்தது போன்ற ஒரு தோற்றமும் ஏற்படுகின்றது.

இந்த ஐயங்களுக்கு தேர்தல் ஆணையம் விடை தர வேண்டும். தேர்தல் தேதிக்கும் முடிவுகள் அறிவிக்கப்படும் தேதிக்கும் மிக நீண்ட இடைவெளி இருக்கின்றது. ஏற்கனவே வாக்குப்பதிவு இயந்திரங்கள் பல்வேறு தனியார் இடங்களிலும் கடைகளிலும் கிடந்த முன்மாதிரிகளை பார்த்திருக்கின்றோம். எனவே இந்த தேர்தல் நியாயமாக நடக்குமா என்ற அச்சம் மக்கள் மனதிலே உச்சமாக எழுந்திருக்கின்றது. இதற்கான விடைகளை தேர்தல் ஆணையம் தான் தர வேண்டும்.

You may also like

Leave a Comment

3 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi