புதுடெல்லி: இரட்டை இலை சின்னம் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக பிளவுபட்டது. இரட்டை இலை சின்னத்தை மீட்க டிடிவி தினகரன் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் முயன்றதாகவும் சின்னத்துக்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் கடந்த 2017ல் டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பான புகாரை விசாரித்த டெல்லி குற்றப்பிரிவு போலீசார் டிடிவி தினகரன் மற்றும் சுகேஷ் சந்திரசேகரை கைது செய்தனர்.
மேலும் மல்லிகார்ஜூனா, நாது சிங், புல்கிட் குந்த்ரா, பி குமார், லலித் குமார், ஜெய் விக்ரம் ஹரன், நரேந்திர ஜெயின் உள்ளிட்டவர்களும் கைது செய்யப்பட்டனர். டிடிவி தினகரன் ஜாமீனில் வெளியே வந்தார். ஆனால் முக்கிய குற்றவாளியான சுகேஷ் சந்திரசேகர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஏழு ஆண்டுகளுக்கு மேலாக, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ், ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஜாமீன் மனுவை நேற்று விசாரித்த நீதிபதி விஷால் கோக்னே, சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். சுகேஷ் ஜாமீன் பெற்றாலும், பிற வழக்குகள் காரணமாக அவர் சிறையில் இருந்து வெளியே வரமுடியாது.