உத்திரமேரூர்: உத்திரமேரூர், இரட்டைத்தாளீஸ்வரர் கோயிலில் வருஷாபிஷேகம் மற்றும் லட்சதீப பெருவிழா கோலாகலமாக நடந்தது. உத்திரமேரூரில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று பஜார் வீதியில் உள்ள மனோன்மணி அம்மை சமேத ஸ்ரீ இரட்டைத்தாளீஸ்வரர் கோயில். இந்த கோயிலில் 8ம் ஆண்டு வருஷாபிஷேகம் மற்றும் லட்சதீப பெருவிழா நேற்று கோலாகலமாக நடைப்பெற்றது.
விழாவையொட்டி, காலை கோயில் வளாகத்தில் யாக குண்டங்கள் அமைத்து விக்னேஷ்வர பூஜை, கலச பூஜை, யாக வேள்வி பூஜைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து, சிவாச்சாரியர்களின் வேத மந்திரங்கள் முழங்க மூலவருக்கு 108 சங்காபிஷேகம் நடைப்பெற்றது. பின்னர், இரட்டைதாளீஸ்வரர் மற்றும் மனோன்மணி அம்மையருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
தொடர்ந்து, கோயில் வளாகத்தில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர், கோயில் வளாகத்தில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. மாலை பக்தர்கள் கோயில் முழுவதும் எலும்மிச்சைக் கொண்டு நெய் தீபம் ஏற்றி சாமியை வழிபட்டனர். கோயில் முழுவதும் ஏற்றப்பட்ட தீபமானது கோயில் முழுவதும் பிரகாசமாக ஜொலித்து ரம்யமாக காட்சியளித்தது.
இதைத்தொடர்ந்து, ஆன்மீக இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவையொட்டி, கோயிலில் நாள் முழுவதும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ஞானமணி உட்பட கோயில் நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் சிறப்பாக செய்திருந்தனர்.