Thursday, September 19, 2024
Home » உடலை உறுதியாக்கும் தோப்புக்கரணம்!

உடலை உறுதியாக்கும் தோப்புக்கரணம்!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

சில வருடங்களுக்கு முன்பு வீட்டுப்பாடம் செய்யாதவர்களை பள்ளி ஆசிரியர்கள் தோப்புக் கரணம் போட சொல்வதை கேட்டிருக்கிறோம். பிள்ளையார் கோயில்களில் வழிபாட்டிற்காக தோப்புக் கரணம் போடுபவர்களை பார்த்திருக்கிறோம். இவை எல்லாம் மிக சாதாரணமாக நடக்கும் நிகழ்வுகள். ஆனால், இப்போது தோப்புக்கரணம் போடும் பழக்கம் படிப்படியாகக் குறைந்து முற்றிலும் மறைந்துவிட்டது என்றே கூறலாம்.

ஆனால் தண்டனையாகவோ, பிரார்த்தனையாகவோ நம் முன்னோர்கள் கற்றுக் கொடுத்த தோப்புக்கரணம் போடும் பழக்கம் ஒரு மிகப்பெரிய உடற்பயிற்சியாகவும், அக்குபஞ்சர் சிகிச்சை முறையாகவும், உடலின் பல உறுப்புகளை தூண்டும் முறை என்பதும் நமக்குத் தெரியாது. காதுகளை பிடித்துக் கொள்வதால் முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. இரு கால்களுக்கும் சற்று இடைவெளிவிட்டு நிமிர்ந்து நின்றபடி இடது கையால் வலது காதையும் வலது கையால் இடது காதையும் பிடித்தபடி பாதங்களை முழுமையாக நிலத்தில் பதித்தபடி பாதங்களை முழுமையாக நிலத்தில் பதித்தபடி உட்கார்ந்து எழுவதே தோப்புக்கரணம் ஆகும்.

இடது கையால் வலது காதுமடலையும், வலது கையால் இடது காதுமடலையும் பிடிக்க வேண்டும். கட்டை விரல் வெளியேயும் ஆள்காட்டி விரல் உட்பக்கம் இருக்குமாறு இருவிரலால் பிடிக்க வேண்டும். ( வலது கை இடது கையின் மேல் இருக்க வேண்டும்) முதுகுதண்டு நேராக இருக்கும்படியும், தலையை நேராய் பார்த்தபடியே முச்சுக் காற்றை மெதுவாகவும் சீராகவும் விட்ட படியே உட்கார்ந்து எழ வேண்டும்.

அதிகம் சிரமப்படாமல் முடிந்த அளவு உட்கார்ந்து மூச்சை இழுத்துக் கொண்டே பொறுமையாக எழ வேண்டும். இப்படி உட்கார்ந்து எழும்போது மூளையின் இரு பகுதிகளும் பலன் அடைகின்றன. இதனால் மூளையின் நரம்பு மண்டலங்களின் வழியாக சக்தி வாய்ந்த மாற்றங்கள் நிகழ்கின்றன. தோப்புக்கரணத்தின் மகிமையை ஆராய்ந்த அமெரிக்க நிபுணர்கள், இந்த எளிய உடற்பயிற்சியின் மூலம் மூளையின் செல்களும், மூளைக்கு தகவல் அனுப்பும் காரணிகளும் வலுப்பெற்று நியூரான்களும் புத்துணர்ச்சி அடைந்து, மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளைப் பெற்று மூளையின் நியூரான்களின் செயல்பாடுகள் அதிகரிப்பதை நிரூபித்துள்ளனர்.

விநாயகர் வழிபாட்டில் தோப்புக்கரணம் இடம்பெறுவது முழு உடல் நலத்திற்கும் உகந்தது என்பது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆட்டிசம் போன்ற மன இறுக்கம் சம்பந்தப்பட்ட நோய்களுக்குக் கூட தோப்புக் கரணத்தை தினமும் பயிற்சி செய்து வந்தால் வியக்கத்தக்க மாற்றங்களைக் காணலாம் என்று அமெரிக்க நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். மூட்டுவலிக்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக உடலில் உப்புச் சத்து குறைந்தாலும், அதிகமானாலும் சவ்வு பாதிக்கப்பட்டு மூட்டுவலி ஏற்படும்.

மூட்டுகளில் உள்ள குருத் தெலும்புகள் பாதிப்பால் மூட்டு வலி உண்டாகிறது. சிறுநீரகம் செயல்பாடு குறைவும் ஒரு காரணம். தேவைக்கதிகமான கொழுப்புச்சத்து மற்றும் அதிகப்படியான நீர் சேர்வதாலும், உடல் எடை அதிகரிக்கும். பால்வினை நோயாலும் மூட்டுவலி ஏற்படும். கருப்பை அகற்றிய பெண்களுக்கும் எலும்பு தேய்ந்து மூட்டுவலி வர வாய்ப்புள்ளது.தரையில் சமமாக கால் பதிக்கக் கூட சிலரால் முடியாது. அப்படியே காலை வைத்தாலும் அதில் ஒரு பிடிமானம் இல்லாமல் ஆடுவது போன்ற உணர்வு இருக்கும். வலி அதிகமான பிறகு யோகா, தியானம் என சில பயிற்சிகளை செய்யத் தொடங்குவார்கள்.

ஆனால் அப்படியும் கூட வலி குறையாமல் அதிகமானதாக சிலர் கூறுவார்கள். பெரியவர்கள் மூட்டுவலி என்று கூறும் காலம் போய் இப்போது இளவயதினர் கூட கூறும் வார்த்தை இதுதான். அதிக எடை மற்றும் ஒரே இடத்தில் மணிக்கணக்கில் அமர்ந்து வேலை செய்தல், உடல் உழைப்பும், உடற்பயிற்சியின்மையும் இதற்கு காரணம். ஸ்டீராய்டு மருந்துகள் மற்றும் வலி நிவாரணிகளும் தைலம் தேய்ப்பது, ஒத்தடம் போடுவது தற்காலிகத் தீர்வையே தரும்.

எளிய தோப்புக்கரணத்தின் பலன்களோ மிகவும் அற்புதமானவை. தரையில் அமர்ந்து எழுந்திருப்பதால், நம் உடலின் வலிமை அதிகரித்து ஆயுளும் கூடும். தரையில் உட்கார்ந்து எழும்போது ரத்த ஓட்டம் இதயத்தில் சீராக இருப்பதால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். நம் உடலின் ஒவ்வொரு பாகமும் பலமடைகிறது. குறிப்பாக தரையில் அமர்வதால், முழங்கால் மூட்டுக்களும், இடுப்பெலும்புகளும் வலுவடைகின்றன. அடிக்கடி உட்கார்ந்து எழுந்திருப்பதால், இவை மிகவும் இலகுத் தன்மை அடைந்து நோய்களை அண்டவிடாமல் தடுக்கிறது.

முழு ஆரோக்கியம் நம் உடலுக்கு வேகமாக கிடைக்க இதை விட்டால் வேற வழியே இல்லை எனலாம். உங்கள் வாழ்நாள் முழுதும் பூரண ஆரோக்கியத்துடன் வாழலாம். இதனால் காலில் உள்ள தசைகள் வலுப்பெறுவதுடன் உடலில் உள்ள தசைகளும் சேர்ந்தே வலுவடையும். உடலின் மொத்த உறுப்புகளும் மிகுந்த பயன் அடையும். இந்த எளிய பயிற்சி மூலம் நம் உடல் மேற்புறமும், கீழ்புறமும் சமமாக வலுவடையும். இயல்பாக எந்த வேலை செய்தாலும் தசைகளை சமநிலைப்படுத்தி வலுவுடனும் மிகவும் இலகுவாக வலியற்று நகரும் தன்மையுடன் செயல்பட வைக்கிறது. உடல் எடை குறைந்து மூட்டுவலி இருந்த இடம் தெரியாமல் போகும்.

வயிற்று தசைகளை வலிமைப்படுத்தும். அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்களும், சயாட்டிகா என்றழைக்கப்படும் இடுப்புச் சந்து வாதம் உள்ளவர்களுக்கும் இந்த தோப்புக்கரணம் நல்ல பயனளிக்கும். இடுப்பு மற்றும் மூட்டுகள் வலுவடைந்து தசைப்பிடிப்பு, மூட்டுவலி, முடக்குவாதம் போன்றவை நம்மை விட்டொழியும். முக்கியமாக உடலில் தேங்கியுள்ள கழிவுகள் முழுமையாக வெளியேற்றப்படுகிறது. உடலில் உள்ள சக்தி சீராக தசை, உள்ளுறுப்புகள் மற்றும் சுரப்பிகளுக்கு அனுப்பப்படுகிறது. இதனால் பெருங்குடல் வலுவடைந்து, சீரான அசைவுகளின் மூலம் மலத்தை வெளியேற்றுகிறது. மலச்சிக்கல் தீர்வதற்கு இது மிகச் சிறந்த வழியாகும்.

இந்த பயிற்சியை எங்கிருந்தபடியும் செய்து கொள்ளலாம். ஆரம்ப காலகட்டங்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறை 15 லிருந்து 20 முறை தோப்புக்கரணம் போடலாம். முதியவர்கள் தன்னிச்சையாக நின்ற நிலையில் தோப்புக்கரணம் போட முடியாது. ஆகவே அவர்கள் ஜன்னல் கம்பிகளை பிடித்துக் கொண்டோ, நட்டுவைக்கப்பட்ட இரும்பு, மரத்தூண்களை பிடித்துக் கொண்டோ உட்கார்ந்து எழுந்திருக்கலாம்.

தொகுப்பு: ஸ்ரீதேவிகுமரேசன்.

You may also like

Leave a Comment

7 + 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi