லண்டன்: உலக நம்பர் 1 டென்னிஸ் வீரர் ஜேனிக் சின்னர், ஊக்க மருந்து பயன்படுத்தியதற்காக விதிக்கப்பட்ட 3 மாத தடையை ஏற்றுக் கொண்டுள்ளார். இத்தாலியை சேர்ந்த டென்னிஸ் வீரர் ஜேனிக் சின்னர் உலக நம்பர் 1 வீரராக திகழ்கிறார். இவர், கடந்தாண்டு ஆகஸ்டில் நடந்த ஒரு போட்டியின்போது நடந்த சோதனையில் தடை செய்யப்பட்ட குளோஸ்டெபோல் என்ற ஊக்க மருந்து அவர் ரத்தத்தில் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், தனது உதவியாளர்கள் மசாஜ் மற்றும் விளையாட்டு தொடர்பான சிகிச்சைகள் அளித்தபோது தவறுதலாக அந்த மருந்து ரத்தத்தில் கலந்திருக்கக் கூடும் என சின்னர் கூறியிருந்தார். இருப்பினும் அவர் போட்டியில் விளையாட 3 மாத தடை விதிப்பதாக சுயேச்சையாக செயல்படும் தீர்ப்பாய அமைப்பு உத்தரவிட்டிருந்தது. இதை ஏற்க முடியாது என சின்னர் கூறி வந்தார்.
இந்நிலையில், உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு (வடா) நிர்வாகிகள் சின்னருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து 3 மாத தடை உத்தரவை சின்னர் ஏற்க ஒப்புக் கொண்டதாக வடா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த தடை, பிப். 9ம் தேதி முதல் மே 4ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும், அதற்கு முன்னதாக ஏப். 13ம் தேதி சின்னர் பயிற்சிகளை துவக்கலாம் என்றும் வடா அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதனால், வரும் மே 25ம் தேதி துவங்கும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளில் விளையாட சின்னருக்கு பிரச்னை இருக்காது என்றும் வடா நிர்வாகிகள் கூறினர்.