Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஊக்க மருந்து உறுதியானதால் நம்பர் 2 வீராங்கனை இகா ஸ்வியடெக் டென்னிஸ் ஆட 1 மாதம் தடை

லண்டன்: டபிள்யூடிஏ தர வரிசைப்பட்டியலில் உலகின் நம்பர் 2 டென்னிஸ் வீராங்கனையான போலந்தை சேர்ந்த இகா ஸ்வியடெக், ஊக்க மருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் ஒரு மாதம் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது டென்னிஸ் அரங்கில் பலத்த அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. போலந்தை சேர்ந்த இகா ஸ்வியடெக் (23), கடந்த 2022 ஏப்ரலில், டபிள்யூடிஏ தர வரிசைப்பட்டியல்படி, உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை என்ற பெருமையை பெற்று, தொடர்ந்து 125 வாரங்கள் அதை தக்க வைத்துக் கொண்டார்.

இந்தாண்டு துவக்கத்தில் ஆடிய போட்டிகளில் சரிவுகளை கண்ட அவர், 2024, அக்டோபர் 21ம் தேதி, உலகளவில் நம்பர் 2 நிலைக்கு தள்ளப்பட்டார். இவர், பெண்கள் ஒற்றையர் போட்டிகளில் 22 முறை பட்டம் வென்றுள்ளார். பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை 4 முறையும், அமெரிக்க ஓபன் பட்டத்தை ஒரு முறையும் பெற்றவர். இந்நிலையில், கடந்த ஆகஸ்டில், சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டிகளுக்கு முன், இகா ஸ்வியடெக்கின் சிறுநீர் ஊக்க மருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. முடிவில், அவர் டிரைமெடாஸிடைன் (டிஎம்இசட்) எனப்படும் தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது.

இதையடுத்து, 1 மாதம் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க இகாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊக்க மருந்து பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் வழக்கமாக பல ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்படும். ஆனால், ஸ்வியடெக் உட்கொண்ட மருந்தில் அவர் அறியாமல் மிக சிறிய அளவில் டிஎம்இசட் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாகவே அவருக்கு ஒரு மாதம் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச டென்னிஸ் கண்காணிப்பு ஆணையம் (ஐடிஐஏ) தெரிவித்துள்ளது. இகா ஸ்வியடெக் ஊக்க மருந்து பிரச்னையில் ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது டென்னிஸ் ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.