ஆரணி: சினிமா ஆக்டரை நம்பி ஏமாற வேண்டாம் மக்களே என்றபடி, தனது கட்சி உறுப்பினர் அட்டையை கிழித்து தீ வைத்து எரித்த தவெக பிரமுகரால் ஆரணியில் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 22ம் தேதி வடக்கு மாவட்ட செயலாளர் சத்யா தலைமையில் பால்குட ஊர்வலம் நடந்தது. அப்போது, ஆரணி டவுன் அம்பேத்கர் நகரை சேர்ந்த தவெக பிரமுகரும், ஓவியருமான ஹரீஸ்பாபு(45), அங்கு வந்து, விஜய் மக்கள் இயக்கத்தில் நிர்வாகியான தனக்கு ஏன் தகவல் தரவில்லை எனக்கேட்டு, மாவட்ட செயலாளர் சத்யாவிடம் தகராறில் ஈடுபட்டார். மாவட்ட செயலாளர் சாதி ரீதியாக தனிமைப்படுத்தி வருகிறார் என்று குற்றம்சாட்டி தகராறு செய்தார்.
இதுகுறித்து சத்யா புகாரின்படி ஹரீஸ்பாபு மீது ஆரணி டவுன் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்தனர். இதையடுத்து 2 நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற ஹரீஸ்பாபு, தவெகவுக்கு எதிராக முழக்கம் எழுப்பினார். தனது காரில் பொருத்தியிருந்த தவெக கட்சி கொடி மற்றும் விஜய்யின் படத்தை அகற்றி, ‘கட்சியின் பொதுச்செயலாளர் ‘ஆனந்த் இல்லை, ஒன் சைடு ஆனந்த்’ என்று பெயரை மாற்றி விடுங்கள் தலைவரே, உங்களை நேசித்துதான் கட்சிக்கு வந்தேன். 13 ஆண்டுகளாக உங்கள் மீது உயிரை வைத்து உங்கள் அமைப்புக்காக உழைத்தேன். அதைவைத்து, ஏன் என்னை அழைக்கவில்லை என்றுநியாயம் கேட்டதற்கு, என் மீது கேஸ் போட்டு, நீதிமன்ற வாசலுக்கு கொண்டு வந்து நிறுத்தி உச்சத்தில் அமர வச்சிட்டீங்க.
இந்த மாதிரி கட்சி எனக்கு தேவையே இல்லை. சாதி அடிப்படையில் என்னை கீழே தள்ளி மிதிப்பீங்க, அதனால், உங்களுக்கு அடிமையாகவே இருக்க முடியுமா? எனக்கு வந்த நிலைமை யாருக்குமே வேண்டாம். சினிமா ஆக்டரை நம்பி தயவு செய்து, அவர்கள் பின்னாடி போக வேண்டாம். என்னை முன்மாதிரியாக வைத்து ஒதுங்கிடுங்க’ என்று சத்தமிட்டு கூறிய ஹரீஸ்பாபு, தனது உறுப்பினர் அட்டை, விஜயின் புகைப்படங்களை கிழித்து தீ வைத்து கொளுத்தினார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதால் தவெக கட்சி நிர்வாகிகளிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.