Monday, December 2, 2024
Home » தடைகளைக் கண்டு விலகி ஓடாதீர்கள்!

தடைகளைக் கண்டு விலகி ஓடாதீர்கள்!

by Nithya

உலகில் பிரச்னைகள் இல்லாத மனிதர் இல்லை. பிரச்னைகளை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் வெற்றி தோல்வி அமைகிறது. பிரச்னைகள் என்பவை உண்மையில் பிரச்னைகளே அல்ல. சற்று நேரம் அமைதியாக உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால் நமக்கு வந்திருக்கும் பிரச்னை பெரிய பிரச்னையாகவே தெரியாது. கொஞ்சம் தெளிவாக யோசிக்க முடிந்தால் அதற்கான தீர்வுகளும் நமக்குப் பளிச்சிடும். பிரச்னைகளை எதிர்கொள்ளும்போது ஒரு தீயணைப்புவீரரைப் போலச் செயல்பட வேண்டும். அதென்ன தீயணைப்பு வீரரை போலச் செயல்பட வேண்டும் என்று தானே கேட்கிறீர்கள்.

கட்டடத்தில் தீப்பிடித்துவிட்டது என்றால் எல்லோரும் பதறியடித்து வெளியே ஓடுவார்கள். ஆனால், தீயணைப்பு வீரர்கள் கட்டடத்தை நோக்கி உள்ளே ஓடுவார்கள். அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களில் முக்கியமானது எதுவென்றால், தன்னுடைய உயிருக்கோ, உடமைக்கோ பாதிப்பு உண்டாகாமல் கவனமாக இருப்பது. இரண்டாவது தீக்குள் சிக்கி உள்ளவர்களை உயிருடன் மீட்பது முக்கியம். அதற்கு அடுத்ததாக கட்டடத்தில் இருக்கும் தீப்பிடிக்கும் பொருட்களை அகற்றுவது. ஆகவே, பிரச்னையைக் கையாளத் தொடங்குவதற்கு முன் தீயணைப்புவீரரைப் போல ஒரு முன் தயாரிப்பு நிச்சயம் அவசியம். பிரச்னைகளை இயல்பாகவும், மனோ தைரியத்துடனும் அணுகும் போதுதான் சவால்களை சாதனைகளாக மாற்றிவிடமுடியும்.

பிரச்னைகள்தான் வாய்ப்புகளை உருவாக்குகின்றன. வாய்ப்புகள் நம்மை வெற்றியாளர்களாக உருவாக்குகின்றன. பிரச்னைகளைத் தீர்க்கும்போது நாம் முன்னேறுகிறோம். எல்லைகளைத் தாண்டிச் செல்லும்போது எதிரில் வரும் தடைகளைத் தகர்த்து எறியும்போது மிகச்சிறந்த வெற்றியைப் பெற்றுவிட முடியும். இதற்குச் சரியான உதாரணமாக நடியா நாடிம் என்ற சாதனைப் பெண்மணியை சொல்லலாம்.

டென்மார்க்குக்காக விளையாடும் 33 வயதான கால்பந்து வீராங்கனைதான் சாதனை மங்கை நடியா நாடிம். மற்ற வீரர்களைப் போல அவர் ஒரு சராசரி வீராங்கனை அல்ல. இவரின் கதை பலருக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியது. நடியா நாடிம் இன்று உலகில் மிகவும் செல்வாக்குமிக்க கால்பந்து வீராங்கனைகளில் ஒருவராகக் திகழ்ந்துகொண்டு இருக்கிறார்.

குறிப்பாக 2021ஆம் ஆண்டு பாரிஸ் பிரெஞ்சு லீக் பட்டத்தை வென்றபிறகு இவரின் புகழ் எங்கோ போய்விட்டது. ஆனால், இந்த வெற்றிகளை அவர் சாதாரணமாகப் பெற்றுவிடவில்லை. பல்வேறுத் தடைகளைத் தாண்டி சாதித்த அவருடைய வாழ்க்கை மிகுந்த தன்னம்பிக்கைமிக்கது. அவருடைய குழந்தைப் பருவம் அதிர்ச்சிதரக்கூடிய கதைகளால் நிரம்பியது. நடியா நாடிம் ஆப்கானிஸ்தானில் பிறந்தவர். ஆம், ஆப்கான் தான் இவரின் பூர்வீகம். ஆப்கானிய ராணுவத்தில் ஜெனரலாக இருந்த நாடிம்மின் தந்தை அங்கு நடைபெற்ற போரில் கொல்லப்பட்டார். அப்போது நடியாவிற்கு வெறும் 11வயதுதான். தொடர்ந்து நடந்துவந்த போர் சூழ்நிலைகள் காரணமாக, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தனது தாய் மற்றும் நான்கு சகோதரிகளுடன், ஆப்கானிஸ்தானில் இருந்து அகதியாக பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றது நாடிம்மின் குடும்பம். பின்னர் அங்கிருந்து ஐரோப்பாவுக்குச் சென்றுள்ளனர்.

லண்டனில் அவரின் உறவினர்கள் சிலர் இருப்பதால் அங்குதான் தப்பிச் செல்லத் திட்டமிட்டார்கள். அதற்காக பாகிஸ்தான் வழியாக இத்தாலிக்குச் சென்றார்கள். அங்கிருந்து, அவருடைய முழு குடும்பமும் ஒரு லாரியில் ஏறி பயணம் செய்தார்கள். லண்டனை நோக்கிச் செல்கிறோம் என நினைத்து பயணித்துக் கொண்டிருக்கையில், ஒரு இடத்தில் லாரியிலிருந்து அவர்கள் இறக்கிவிடப்பட்டார்கள். சுற்றிலும் மரங்கள் சூழ்ந்த காடுபோல் காட்சி அளித்தது. அவர்கள் அங்கு பார்த்ததெல்லாம் மரங்கள் மட்டும்தான். அப்போது ஒரு வழிப்போக்கரிடம் இது எந்த ஊர் என்று கேட்டபோதுதான் டென்மார்க்கில் இறக்கிவிடப்பட்டது நடியாவின் குடும்பத்திற்குத் தெரியவந்தது. இருந்தபோதும் நடியா மனம் தளரவில்லை. டென்மார்க்கில் வாழ முடிவுசெய்தார்.
பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு அவரது குடும்பத்தினரின் தாயகமாக மாறியது டென்மார்க். சிறுவயதில் இருந்து கால்பந்து போட்டிகளில் ஆர்வம் மிக்கவராக இருந்த நடியா, அங்குள்ள ஆல்போர்க் கிளப்பில் இணைந்து கால்பந்து விளையாடத் தொடங்கினார். 2009ஆம் ஆண்டில், நடியா டேனிஷ் (டென்மார்க்) தேசிய அணிக்காக கால்பந்தாட்ட வீராங்கனையாக அறிமுகமானார். பின்னர் தனது அணியின் பல வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருந்து ‘சிறந்த கோல் அடிக்கும் வீரர்’ என்ற நற்பெயரைப் பெற்றார்.

கால்பந்து வீராங்கனையாக இருந்துகொண்டு, நடியா தனக்கு கிடைத்த கல்வியையும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். தற்போது அறுவை சிகிச்சை நிபுணராக ஆவதற்காக ஆர்ஹஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வருகின்றார். இப்போதைக்கு கால்பந்து விளையாட்டில் தீவிர கவனம் செலுத்தி வரும் நடியா விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றபின்பு மருத்துவத் தொழிலை தொடரப்போவதாக தெரிவித்திருக்கிறார். சிறந்த கால்பந்து வீராங்கனையாகத் திகழ்ந்துகொண்டு மருத்துவ மாணவியாக மருத்துவம் படித்துவரும் நடியாவின் போராட்டம் மிகுந்த வாழ்க்கை பலருக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியதாக உள்ளது.

தனது நாட்டில் நடந்த போரில் தந்தையை இழந்து, குடும்பத்துடன் டென்மார்க்கிற்குத் தப்பி வந்து, கால்பந்து வீராங்கனையாக உருவாகி 200 கோல்களை அடித்தது மட்டுமில்லாமல், டேனிஷ் தேசிய அணியை உலகின் சிறந்த அணியாகப் பெருமைப்படுத்தி இருக்கிறார். மேலும்,ஒரு அறுவை சிகிச்சை நிபுணராவதற்கு படித்தும் வருகிறார். போப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளுள்ள சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் நடியாவும் இடம்பிடித்துள்ளார். மேலும் 11 மொழிகளைக் கற்றுக்கொண்டு அந்த மொழிகளைப் பேசும் திறமை மிக்கவராகவும் திகழ்ந்துவருகிறார்.

இவரைப்போலவே நீங்களும் வெற்றியை வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் ஒரு தீர்மானத்திற்கு வாருங்கள். வாழ்வில் ஏற்படும் தடைகளைக் கண்டு ஒருபோதும் விலகி ஓடாதீர்கள். என்னால் முடியும், என்னால் முடியும் என்று திரும்பத் திரும்ப மனதில் பதிய வையுங்கள். மனதில் பதியவைத்ததைச் செயல்படுத்த முழு முயற்சி செய்யுங்கள். இப்போது மட்டுமல்ல, எப்போதும் நீங்கள் தான் ஜெயித்துக் கொண்டே இருப்பீர்கள்.

You may also like

Leave a Comment

nine − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi