Monday, December 4, 2023
Home » கண்ணைக் கட்டிக்கொள்ளாதே

கண்ணைக் கட்டிக்கொள்ளாதே

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி

நூறாவதுநாள்

ஒரு ஏரி இருக்கிறது. மழை நேரங்களில் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் இருக்கும் உபரி நீர் அனைத்தும் அந்த ஏரிக்கு வருமாறு வாய்க்கால்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. கூடவே உபரி நீர் வெளியேறுவதற்கான பாதையும் ஏரியிலிருந்து வெளியே செல்கிறது. நீண்ட நாட்களாக ஏரி முழு கொள்ளளவை எட்டவில்லை. காலப் போக்கில் ஏரிக்கு வரும் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன.

ஒரு முறை நல்ல மழை பெய்கிறது. ஏரி நிரம்பி விடுகிறது. உபரி நீர் வெளியேறும் பாதை சரியாக இல்லாததால் ஏரியில் நீர் தழும்பி நிற்கிறது. அப்போதும் பாதைகள் சரி செய்யப்படாததால் ஒரு சமயம் திடீரென்று எல்லா நிறைய திசைகளில் இருந்து கரைகள் உடைப்பெடுத்து ஏரி நீர் வெளியேறுகிறது. அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் நீர் நுழைந்து நிறைய பொருட்சேதம் ஏற்படுகிறது.

இது ஆக்கிரமிப்புகள் நிறைய இருக்கும் பெருநகரங்களில் நாம் அவ்வப்போது கேள்விப்படும் செய்தி. கிட்டத்தட்ட இதே போல் தான் பார்வதி என்பவரின் விழித்திரையிலும் ஒரு நிகழ்வு நடந்தது. அவரது விழித்திரையில் இருந்து பயன்படுத்தப்பட்ட, ஆக்சிஜன் அளவு குறைந்த ரத்தத்தை (deoxygenated blood) மீண்டும் இதயத்திற்கு எடுத்துச் செல்லும் முக்கிய சிரையான central retinal vein இல் அடைப்பு ஏற்பட்டு விட்டது. அதனால் விழித்திரையின் அடுக்குகளில் நிறைய வீக்கம் ஏற்பட்டது. அருகில் உள்ள ரத்த நாளங்களில் இருந்து ரத்தக்கசிவும் ஏற்பட்டது. இந்த நிலையில் பார்வை மறைக்கிறது என்று அவர் ஒரு பெரிய மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்.

அங்கு அவருடைய நோய் சரியாக CRVO central retinal vein occlusion என்று கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. ரத்த நாள அடைப்பிற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும், பின் கண்களுக்குள் ஊசி செலுத்த வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். நோயின் தன்மை குறித்து சரியாகப் புரியாததால் ‘கண்ணுக்குள்ள ஊசியா? வேண்டாம்!’ என்று ஒரு மாதத்திற்கு மேல் தாமதித்திருக்கிறார்.

‘‘கண்ணாடி போட்டால் சரியாகுமா?” என்று என்னிடம் வந்து கேட்டதற்கு, நான் பரிசோதனை செய்து ஏரி உடைப்பெடுத்த கதையை உதாரணமாகச் சொல்லி விளக்கினேன். OCT பரிசோதனையில் அவரது விழித்திரையில் 680 micron அளவிற்கு வீக்கம் இருந்தது. சரியான அளவு 280 மைக்ரான்தான். உங்களுக்கு இவ்வளவு வீக்கம் இருக்கிறது. இந்த ஊசி போட்டால் வீக்கம் வெகுவாகக் குறையும் என்று படங்களைக் காட்டி விளக்கியதில் கண்களுக்குள் ஊசி செலுத்த ஒத்துக்கொண்டார்.

உடனடியாக அவரது வலது கண்ணின் விழிப்படிக நீர்மம் பகுதியில் Ranibizumab ஊசியை செலுத்தினோம். இரண்டு வாரங்கள் கழித்து மீள் பரிசோதனைக்கு வந்தபோது அவரது பார்வை ஓரளவுக்கு மீண்டிருந்தது. அடுத்து இரண்டு வாரங்கள் கழித்து OCT பரிசோதனை செய்கையில் விழித்திரையின் வீக்கம் முற்றிலும் குறைந்து 280 மைக்ரான் அளவிற்கு வந்திருந்தது. ஆனால் retinal artery and vein உள்ளே நுழையும் இடமான ஆப்டிக் டிஸ்க் பகுதியில் சில புதிய ரத்த நாளங்கள் (new vessels) தோன்றியிருந்தன.

எப்போதெல்லாம் விழித்திரைக்கு ஆக்சிஜன் ஓட்டம் தடைபடுகிறதோ அப்போதெல்லாம் VEGF என்ற புரதம் உருவாகி, அதனால் புதிய ரத்த நாளங்கள் வளரும். பார்வதிக்கான சிகிச்சையில் முதல் இலக்கு அவருடைய பார்வையைக் காப்பாற்றுவது. இன்னொரு முக்கிய இலக்கும் இருக்கிறது. அதிகபட்ச VEGF வெளியேற்றத்தால், தற்போது ஆப்டிக் பகுதியில் வளர்ந்திருக்கும் சிறிய ரத்த நாளங்களைப் போன்றே கண்ணின் கிருஷ்ணபடலம் (iris) பகுதியிலும், கிருஷ்ண படலத்தின் ஓரங்களில் அக்வஸ் திரவம் பகுதியிலும் புதிய ரத்த நாளங்கள் உருவாகாமல் தடுப்பதுதான் அந்த முக்கிய இலக்கு.

பொதுவாக, கண்ணில் சுரக்கும் அக்வஸ் திரவம் வெளியேறும் பாதையில் (angle) தடை ஏற்பட்டால்தான் கண் அழுத்த நோய் வருகிறது என்பதை நாம் அறிவோம். ஆங்கிள் பகுதியில் புதிய ரத்த நாளங்கள் வளர்ந்தால் அவற்றிலிருந்து இரத்தக் கசிவோ சிறிய தழும்புகளோ ஏற்படக்கூடும். அதனால் அக்வஸ் திரவம் வெளியேறும் பாதை தடைபட்டு கண் அழுத்த நோய் வரக்கூடும். கண் அழுத்த நோயின் பல வகைகளில் neovascular glaucoma என்ற‌ இந்த வகை மிகவும் மோசமானது. எனவே பார்வதிக்கு மீண்டும் ஒரு முறை Ranibizumab ஊசியை செலுத்தினோம். அடுத்து ஒரு மாதம் கழித்து மறுபடியும் பரிசோதனைக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி அனுப்பியுள்ளோம்.

அடுத்த ஆறு மாதங்களுக்கு மாதாமாதம் அவர் பரிசோதனைக்கு வர வேண்டும். அப்பொழுது அவருடைய கண் அழுத்தம் அதிகரித்திருக்கிறதா, விழித்திரை கிருஷ்ணபடலம், ஆங்கிள் பகுதிகளில் புதிய ரத்த நாளங்கள் வளர்ந்திருக்கிறதா என்பதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தேவைப்பட்டால் அந்த கண்ணின் விழித்திரை முழுவதிலும், புதிய ரத்த நாளங்கள் இனிமேல் தோன்றுவதைத் தவிர்க்க Panretinal photocoagulation என்ற லேசர் சிகிச்சையையும் செய்ய வேண்டியிருக்கும். சற்றே தாமதமாக சிகிச்சையைத் துவங்கினாலும், அதன் பின் பார்வதி எங்கள் அறிவுரைகளை ஏற்றுக் கொண்டார். அதனால் அவருடைய பார்வை கொஞ்சம் மீண்டிருந்தது. ஆயுள் முழுமைக்கும் கண் அழுத்த நோய் வராமல் தவிர்த்து விட முடியும் என்று நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.

இது போல் விழித்திரையில் அடைப்பு ஏற்பட்ட பின் மூன்று மாதங்கள் கழித்து அந்த அடைப்பின் பின் விளைவாக கண் அழுத்த நோய் ஏற்படும். முந்தைய 90 நாட்களில் நோயாளியின் விழித்திரைக்கு குறைவான ஆக்சிஜன் கிடைக்கும் நிலைக்கு, உடல் எதிர்வினை ஆற்றியதால் வந்த பிரச்னை தான் இது. சராசரியாக நூறாவது நாளில் கண் அழுத்த நோய் தோன்றுவதால் நமது நாட்டில் இதை ‘100 டே க்ளாகோமா’ என்கிறோம். சில நாடுகளில் 90 day glaucoma என்றும் இதை அழைக்கிறார்கள்.

பார்வதி முதலில் மருத்துவமனைக்கு வருகையில் முழுவதுமாகப் பார்வை பறி போகவில்லை. நடுப்பகுதியில் மட்டும் குறிப்பிடத் தகுந்த அளவில் பார்வை மங்கலாக இருக்கிறது என்றார். ராமலிங்கம் என்ற இன்னொரு நோயாளி. இவர் திடீரென்று காலை முதலே ஒரு கண்ணில் சுத்தமாக பார்வை தெரியவில்லை என்று மதிய நேரத்தில் வந்தார். பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு இதயத்திலிருந்து கண்ணுக்குள் ரத்தம் வரக்கூடிய முக்கியத் தமனியான central retinal artery அடைத்திருந்தது.

இது மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் இருந்து வீட்டிற்கு வரும் குழாயை முழுவதுமாக அடைப்பதற்கு சமமானது. இந்த அடைப்பில் 15 முதல் 20 நிமிடங்களுக்குள் நோயாளி மருத்துவமனையை அடைந்து விட்டால் சில உடனடி சிகிச்சைகள் மூலம் அந்த ரத்த நாள அடைப்பை சரி செய்ய முடியும். 99% எந்த ஒரு நோயாளியும் 15 முதல் 20 நிமிடங்களில் மருத்துவமனைக்கு வர முடியாது. பெருமருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவருக்கே இந்த நிலை ஏற்பட்ட போது, உடனடியாக பார்வை குறைந்ததை அவர் கண்டுகொண்டு கண் பிரிவுக்குச் செல்வதற்கு முன்னால் நிரந்தர பார்வையிழப்பு ஏற்பட்டு விட்டது.

மேலே குறிப்பிட்ட பார்வதிக்கும், இந்த மருத்துவர், ராமலிங்கம் மூவருக்குமே அதன் பின் இதயம் மற்றும் கழுத்து ரத்த நாளங்களை பரிசோதிக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில் இருவருக்கு இதயப் பகுதியிலும் சில மாற்றங்கள் தென்பட்டதால் இதயநோய் மருத்துவரின் ஆலோசனையுடன் வேறு சில சிகிச்சைகளும் பெற்று வருகின்றனர். இவர்களைப் பொறுத்தவரை பார்வையை மீட்டெடுக்க எந்த வழியும் இல்லை.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நிறைய பேருக்கு விழித்திரையில் ரத்த நாள அடைப்புகள் ஏற்பட்டன. கொரோனா வைரஸ் கிருமி உடலின் உள்நுழைந்து உடலெங்கும் சிறிய ரத்த நாள அடைப்புகளை (micro emboli) உருவாக்கியது. நுரையீரல் பாதிப்புடன் பல பேர் மரணம் அடையக் காரணமும் நுரையீரலில் ஏற்பட்ட ரத்தநாள அடைப்புகள்தான். இதைத்தான் சிடி ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே பரிசோதனையில் 60% பாதிப்பு, எழுவது சதவீத பாதிப்பு என்று கூறினோம்.

சிறிய ரத்த நாளங்களில் நடைபெற்றதால் சிறிய ரத்த நாளங்கள் அதிகம் உள்ள பகுதியான விழித்திரையிலும் இதே விளைவுகள் ஏற்பட்டன. சிலர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின் இரண்டு முதல் மூன்று வாரங்களில் இதே அறிகுறி தென்பட்டதாகவும் தகவல்கள் வந்தன. அது தடுப்பூசியால் ஏற்பட்ட பின்விளைவா அல்லது அந்த நேரத்தில் ஏற்கனவே கொரோனா தொற்று அந்த நபரை தாக்கி இருந்ததா என்பதற்கான விவாதங்கள் இன்று வரை நடந்து வருகின்றன.

ரத்த நாள அடைப்பு என்பது மிக கவனமாக அணுக வேண்டிய ஒன்று. கண்களுக்குள் ஊசி மருந்தை செலுத்துதல், லேசர் வைத்தல் போன்ற சிகிச்சைகள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு தொடர் பரிசோதனைகளும் முக்கியம். மாதா மாதம் அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை உங்கள் மருத்துவர் மருத்துவமனைக்கு வரச் சொன்னால் தள்ளிப் போடாதீர்கள். பரிசோதனை செய்துவிட்டு ஒன்றும் பின் விளைவு இல்லை என்று முடிவு வந்துவிட்டால் நல்லது! பரிசோதனையில் லேசான குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டு அது ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்கப்படுவது அதைவிட நல்லது!

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?