நன்றி குங்குமம் டாக்டர்
Screen Time Management
இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் இளம் குழந்தைகளை மகிழ்விக்க, சாப்பிட வைக்க ஸ்மார்ட்போன்கள், லேப்டாப் கேம்கள் உள்ளிட்டவற்றை அவர்களுக்குக் கொடுக்கின்றனர். ஆனால் குழந்தைகளின் மனநிலை மற்றும் உடல் ஆரோக்கியத்தில் இவை ஏற்படுத்தும் தாக்கத்தை பெற்றோர் பலரும் அறியாமல் ஸ்மார்ட்போன்களை குழந்தைகளுக்குக் கொடுக்கின்றனர்.
குழந்தைக்கு பின்நாட்களில் ஏற்படும் பாதிப்பால் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர். அதனால், குழந்தைகளுக்கு செல்போன் டிஜிட்டல் பொருட்களில் வரும் வீடியோக்களை பார்க்கவும், அதில் வரும் கேம்களை விளையாடக் கொடுப்பதால் வரும் விளைவுகளை பெற்றோர் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். இன்று, மொபைல், டேப்லெட், லேப்டாப், டிஜிட்டல் கேம்ஸ் போன்ற சாதனங்களைப் பயன்படுத்துவது மிக இயல்பானது. இந்த டிஜிட்டல் சாதனங்கள் கல்வி, விளையாட்டு, தகவல் பரிமாற்றம் போன்ற நன்மைகளைத் தரும் போதிலும், அதிகப்படியான பயன்பாடு குழந்தைகளின் உடல், மன ஆரோக்கியத்திலும், சமூக வளர்ச்சியிலும் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
மொபைல், டேப்லெட், லேப்டாப், டிஜிட்டல் கேம்ஸ் உள்ளிட்டவற்றால் வரும் பின்விளைவுகள் பற்றி விழிப்புணர்வு சமூகத்தில் எல்லா தரப்பினரிடமும் ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் தற்போது நிலவுகிறது. செல்போன் கொடுப்பதால் வரும் விளைவுகள் குழந்தையின் வயதுக்கு ஏற்றபடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
0-2 வயதுக் குழந்தை
முதல் இரண்டு வருடம் குழந்தையின் மூளை வளர்ச்சி 80% ஆகும். இந்த வயதில் அவர்களின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற பொம்மைகள், பாடல்கள், பெற்றோருடன் உறவாடுவது இவையே அளப்பரிய நன்மை தரும். அறிவுத்திறன், மொழித்திறன், மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுதல் ஆகிய திறன்கள் இந்த முதல் 2 வருடத்தில் வளர்கிறது.
குழந்தைகள் பேசுவதற்கு முன்பு மனிதர்களின் முக உணர்ச்சியைப் பார்த்தும், வாய் அசைவைப் பார்த்தும் அதிகம் கற்றுக் கொள்கின்றனர். செல்போன் கொடுத்து அதில் கார்ட்டூன், பாடல்கள் (rhymes) பார்க்க அனுமதிக்கும்போது அவர்களுக்கு மேலே கூறிய திறன்கள் வளர்ச்சி அடையாமல் போகிறது. இதனால் குழந்தைகளின் மனம் மற்றும் உடல் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
1.பேசுவதில் தாமதம்
2.ஆட்டிஷம்
3.மனித உணர்ச்சிகளை உணரும் திறன் குறைவது
4.கவனச்சிதறல்
5.சுறுசுறுப்பாக விளையாடுவது குறைத்து உடல் பருமன் ஏற்படுகிறது
6.கண்பார்வை பாதிப்பு ஆகியவை ஏற்படுகிறது.
இதை தவிர்க்க முதல் 2 வருடம் வரை உள்ள குழந்தைகளுக்கு போன், டிவி, லேப்டாப் இவற்றில் எந்த ஒரு டிவி, லேப்டாப், மொபல்போன், டேப்லெட் உள்ளிட்டவற்றைப் பார்க்க அனுமதிக்கக் கூடாது. பெரியவர்களும் குழந்தை விளையாடிக்கொண்டிருக்கும் இடத்தில் தொலைக்காட்சியில் நாடகம், செய்திகள் பார்க்கக் கூடாது. அவற்றில் வரும் வன்முறை காட்சிகளை குழந்தையின் மனநிலையை மிகவும் பாதிக்கும்.
பால் கொடுக்கும் தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கும் போது செல்போன் பார்ப்பதால் ஏற்படும் விளைவுகள்:
1.குழந்தை தாய்ப்பால் அருந்தும்போது தாயின் முகத்தை உற்றுப்பார்த்து அடையாளம் காணும். அந்த நேரத்தில் தாய் செல்போன் பார்ப்பதால், குழந்தையால் தாயின் முகத்தை அடையாளம் காணமுடியாது.
2.குழந்தைக்கும் தாய்க்கும் ஆன பிணைப்பு குறையும்
3.குழந்தை சரியாக பால் அருந்துகிறதா என்பதை தவறவிட வாய்ப்பு அதிகம்.
4.குழந்தை அதிகமாகவோ, குறைவாகவோ பால் குடிக்கும் வாய்ப்பும் அதிகம்.
5.ஆக்ஸிடோஸின் அளவு குறைந்து பால் சுரப்பது குறையும்.
6.தாய் செல்போன் பார்ப்பதால் அதன் ரேடியேஷன் அலைகள். குழந்தையின் மூளையை பாதிக்க வாய்ப்பு அதிகம்.
உலக சுகாதர அமைப்பு (WHO) பரிந்துரை
0-2 வயதுக்குள் எந்தவிதமான டிஜிட்டல் திரைப் பயன்பாடும் (screen time) முழுமையாக தவிர்க்கப்பட வேண்டும்.
மாற்றாக என்ன செய்யலாம்?
*குழந்தைகளுக்கு கதைகள் சொல்லுங்கள்.
*முகம் நோக்கிப் பேசுங்கள், பாட்டுகள் பாடுங்கள்.
*குழந்தையுடன் விளையாடுங்கள், கிளைகள், பிளாஸ்டிக் பூமிகள், மெத்தளக் குச்சிகள் போன்ற வண்ணமான, பாதுகாப்பான பொருட்களைக் கொடுங்கள்.
*இயற்கையின் ஒலிகள், ஒளிகள் மூலம் தன்னிச்சையான உணர்வுகளை வளர்த்திடுங்கள்.
2-6 வயது
இந்த வயதில் உடல் வளர்ச்சி, கற்பனைத் திறன், மொழித்திறன் சிக்கல்களை தீர்க்கும் திறன், வாசிக்க கற்றுக் கொள்ளுதல், கதை சொல்லும் திறன் ஆகியவை மேம்படும்.அதிக திரை நேரம்(screen time) இந்த வளர்ச்சியை வெகுவாகப் பாதிக்கிறது. அதிக திரைநேரம் மேலும் குழந்தைகளின் நடவடிக்கையையும் பாதிக்கிறது.
1.தூக்கமின்மை
2.எரிச்சலுடன் இருத்தல்
3.கவனமின்மை
4.கற்பனை விளையாட்டுகள் விளையாடுவது குறைகிறது
5.உணர்ச்சிகளை வெளிப்படுத்தத் தெரியாமல் போவது
6.உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் சிரமம்
இவற்றைத் தவிர்க்க இந்த வயது
குழந்தைகளும் ஒரு நாளில் 1 மணி நேரம் மட்டும் (screen time) வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், 2-5 வயது குழந்தைகளுக்கும் (screen time) திரை நேரத்தை முற்றிலுமாக தவிர்ப்பது மிகச்சிறந்தது.
திரைநேரம் தவிர்க்க என்னென்ன செயல்பாடுகளில் ஈடுபடலாம்:-
1.தன் வயதொத்த குழந்தைகளுடன் விளையாடுவது
2.பெரியோர்களுடன் நேரத்தை செலவழிப்பது அவர்களுக்கு வாழ்க்கை முறைகளை அறிய உதவும்
3.கதை சொல்லுதல்
4.சைகளுடன பாடிக் கொண்டே ஆடுவது.
5.வரைதல்
6.களிமண், மணல் போன்றவற்றில் விளையாடுதல்.
7.இயல்பான விளையாட்டுகளில் ஈடுபடுதல்
8.பொம்மைகளோடு விளையாடுதல்
9.கற்பனை விளையாட்டு(எ.கா) பொம்மைக்கு உணவு ஊட்டுவது போன்று நடிப்பது
10.புத்தகங்களை வாசித்துக் காட்டுதல் அவர்களின் மொழித்திறனை, ஞாபகசக்தியை அதிகரிக்கும், உலகைப் பற்றிய அறிவு மேம்படும்.
7-10 குழந்தைகள்
7-12 மற்றும் 12-15 குழந்தைகளுக்கு 2 மணி நேரத்திற்கும் குறைவாக screen time இருக்க வேண்டும்.
ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்
1.தலைவலி
2.கண்பார்வை பாதிப்பு
3.தனிமையில் இருத்தல்
4.ஞாபகசக்தி குறைபாடு
5.கவனக்குறைபாடு
6.மன அழுத்தம்
7.தூக்கமின்மை
8.வீடியோ கேம் அடிமைத்தனம்
9.உடற்பயிற்சி இன்மை
10.இன்ஸ்டாக்ராம், பேஷ்புக்கில் புதியவர்களோடு பழகுதல் அதனால் ஏற்படும் சிக்கல்கள்
11.வன்முறையில் ஈடுபடுதல்
12.படிப்பில் கவனம் இன்மை
13.சமூக வலைத்தளங்களில் அடிமைத்தனம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.
இவற்றைத் தவிர்க்க செய்ய வேண்டியது
1.பெற்றோர்கள் தங்கள் திரைநேரத்தை 2 மணி நேரமாக குறைத்து குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
2.குழந்தைகள் அதிக நேரம் போனை பயன்படுத்தினால் அதைப் படிப்படியாகக் குறையுங்கள்
3.ஒவ்வொரு நாளும் குழந்தைகளுடன் நேருக்கு நேர் பேசுவதற்கு நேரத்தை செலவிடுங்கள். உங்கள் அலுவலகத்தில் நடந்தவை பற்றி கூறுங்கள்.
குழந்தையிடம் பள்ளியில் நடந்தவற்றைக் கேளுங்கள்
4.போன் பயன்படுத்த குடும்பத்தில் எல்லோருக்கும் பொதுவான விதிகளை அமல்படுத்துங்கள்
5.உணவு உண்ணும் போதும், படுக்கை அறையிலும் போன் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். பெற்றோரும் அதைப் பின்பற்ற வேண்டும்.
6.இரவு தூங்குவதற்கு 2 மணிநேரம் முன்பு போன், தொலைக்காட்சி, லேப்டாப் போன்றவற்றைப் பார்க்க கூடாது என்பதை நடைமுறைப் படுத்துங்கள்.
7.இரவு குழந்தையின் படுக்கை அறையில் போன், லேப்டாப் போன்றவற்றை வைக்காதீர்கள்
8.நடைப்பயிற்சி செல்வது, பூங்கா செல்வது வெளியில் விளையாடுவது போன்றவை மகிழ்ச்சியை அதிகரித்து, மனநலனையும் உடல்நலனையும் மேம்படுத்தும்.
9.குழந்தை என்ன பார்க்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும்
10.குழந்தையின் படைப்பாற்றல் மற்றும் சிந்தனையை வளர்க்க உதவும் டிஜிட்டல் கருவிகளை ஊக்கப்படுத்துங்கள்.
பெரியவர்கள் கவனிக்கவும்
‘பெரியவர்கள்தான் குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள்’ பெரியவர்கள் அதிகமாகத் தொலைக்காட்சி மற்றும் செல்போன் பார்க்கும் வீடுகளில் குழந்தைகளையும் அந்த வழக்கம் தொற்றிக் கொள்கிறது. இதுபோன்ற வீடுகளில் குழந்தைகள் 10 மடங்கு அதிகமாக பார்ப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குழந்தைகள் விரும்புவது கவனம், அன்பு மற்றும் கவனிப்பு மட்டுமே பெற்றோர்களின் கவனிப்பு, அன்பும் பிள்ளைகளைத் திரைநேரத்தை குறைத்து அவர்கள் ஆக்கபூர்வமாக செயல்பட வழிவகுக்கும்.
சுமார் 75% சதவீத குழந்தைகள் செல்போன் பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 90% சதவிகித பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு செல்போன் கொடுக்கக் கூடாது என்று நினைத்தாலும் அதைப் பின்பற்றுவது கடினமாக உள்ளது. 10-16வயது வரை குழந்தைகள் தங்கள் பள்ளிப்படிப்பு சம்பந்தமாக செல்போன் பயன்படுத்துகிறார்கள்.
செல்போன், டேப்லெட், லேப்டாப், டிஜிட்டல் கேம்ஸ் பயன்பாட்டைக் குறைக்க:- பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள், சமூகம் ஆகிய எல்லோரும் கைகோர்த்து செயல்படவேண்டி உள்ளது. செல்போன் பயன்படுத்துவது உடல் நலத்திற்கு தீங்கானது என்று ஊடகங்கள் விழிப்புணர்வு செய்தியை சமுகத்தில் வேரூன்றச் செய்ய வேண்டும்.
செல்போன் தொலைத்தொடர்ப்புக்கான கருவி மட்டுமே, பொழுது போக்கிற்கானது அல்ல என்பது பெரியோர்களும், குழந்தைகளும் உணர வேண்டும். பள்ளிகளில் குழந்தைகள் செல்போன் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதிமொழியை தினந்தோறும் எடுக்க வைப்பது குழந்தைகள் மனதில் ஆழமாகப் பதிய வாய்பாக இருக்கும். உடற்பயிற்சி, யோகா, விளையாட்டு ஆகியவற்றில் குழந்தைகள் ஈடுபட்டால் செல்போன் பயன்பாடு குறையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நேர மேலாண்மை (Time management) குறித்து குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே சொல்லிக் கொடுக்கும்போது உபயோகமற்ற வீண் பொழுதுபோக்கில் நேரத்தைத் குழந்தைகள் வீணடிக்க மாட்டார்கள். மனஅழுத்தம்(stress management) ஏற்பட்டால் அதிலிருந்து மீள்வது, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது போன்றவை பள்ளிகளில் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
தொகுப்பு: சுரேந்திரன்