Saturday, April 13, 2024
Home » 70 ஆண்டுகளாக நிதி கொடுத்து வரும் நன்கொடையாளர்களுக்கு இப்போது ரகசியம் தேவைப்பட்டது ஏன்? முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரைஷி கேள்வி

70 ஆண்டுகளாக நிதி கொடுத்து வரும் நன்கொடையாளர்களுக்கு இப்போது ரகசியம் தேவைப்பட்டது ஏன்? முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரைஷி கேள்வி

by Ranjith

தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த பெரும் வரப்பிரசாதம் என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய் குரைஷி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இது ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும். இது மிகப் பெரிய விஷயம். கடந்த ஐந்து-ஏழு ஆண்டுகளில் உச்ச நீதிமன்றத்தால் நமக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு இது. நன்கொடையாளர் ஏன் ரகசியத்தை விரும்புகிறார்கள் தெரியுமா? நன்கொடைகளுக்கு பதிலாக அவர்கள் பெறும் நன்மைகள், உரிமம், ஒப்பந்தங்களுக்காக இதை செய்கிறார்கள்.

மேலும் பெருமளவில் வங்கிக் கடன் பெற்று வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுவதற்காக கூட அவர்கள் இதை மறைக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் ரகசியத்தை விரும்பினார்கள் போலும்?. அரசும் நன்கொடையாளர்களின் ரகசியத்தை நிலைநிறுத்த முயன்றது. இந்த 70 ஆண்டுகளாக நன்கொடை அளித்த அதே நன்கொடையாளர்களுக்கு இப்போது திடீரென்று ரகசியம் தேவைப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவால் தற்போது ரகசியம் நீக்கப்பட்டுள்ளது. இதனால் நமது ஜனநாயகம் மீண்டும் ஆரோக்கியமாக மாறி உள்ளது.

கொடுத்த நன்கொடையால் ஏதேனும் ஆதாயம் இருந்ததா என்பதை அறிய உதவும். மேலும் ஏதாவது அழுத்தங்களுக்கும் உள்ளான எந்த நன்கொடையாளரும் இருந்திருக்கிறாரா என்பதை அறிய உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

* சுத்தமான பணமா, கருப்பு பணமா? டிஎஸ். கிருஷ்ண மூர்த்தி கேள்வி
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,’ அரசியல் நிதியில் வெளிப்படைத்தன்மைக்கு தேர்தல் பத்திரங்கள் திட்டம் சரியல்ல என்று கடந்த காலங்களில் நான் தெரிவித்து உள்ளேன். எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் ’ என்றார்.
இன்னும் வெகுதொலைவில் இருக்கிறோம்

* என்.கோபாலசாமி தகவல்
ஜூன் 2006 முதல் ஏப்ரல் 2009 வரை தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த என் கோபாலசாமி கூறுகையில்,’ தேர்தல் நிதி முறையைச் சுத்தம் செய்வதில் நாம் இன்னும் வெகு தொலைவில் இருக்கிறோம். கட்சிகளுக்கு தேர்தல் நிதி அளிப்பதில் ஒரு முறை செல்கிறது, மற்றொரு அமைப்பு வருகிறது. இதனால் முன்பு வந்ததை விட அதிகமாக பணம் அங்கு வருகிறது. அதனால் தேர்தல் நிதியளிப்பு முறையை சுத்தம் செய்வதில் நாம் இன்னும் வெகு தொலைவில் இருக்கிறோம்’

* தேர்தல் ஆணையம் வெளிப்படையாக இருக்க வேண்டும்
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறுகையில், ‘தேர்தல் ஆணையத்திற்கு உறுதியான நிலைப்பாடு தேவை. மேலும் மிகவும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம்’ என்றார்.

* 95% நிதியை பா.ஜ பெற்றதில் ஆச்சர்யம் இல்லை: கார்கே
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே: இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது ஜனநாயகமற்றது என்று விமர்சனம் செய்தேன். மேலும் 2019 தேர்தல் அறிக்கையில், மோடி அரசின் சந்தேகத்திற்குரிய தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்வதாக காங்கிரஸ் உறுதியளித்தது. தற்போது மோடி அரசின் இந்த ‘கருப்புப் பண மாற்றம்’ திட்டத்தை ‘அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது’ என்று கூறிய உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்.

மோடி அரசு, பிரதமர் அலுவலகம், நிதியமைச்சர் ஆகியோர் பாஜவின் கஜானாவை நிரப்புவதற்காக ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம், நாடாளுமன்றம் மற்றும் எதிர்க்கட்சிகள் என ஒவ்வொரு அமைப்பையும் புல்டோசர் செய்தது எங்களுக்கு நினைவிருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் 95% நிதியை பாஜ பெற்றதில் எந்த ஆச்சரியமுமில்லை. மோடி அரசு எதிர்காலத்தில் இதுபோன்ற குறும்புத்தனமான யோசனைகளை நாடுவதை நிறுத்திவிட்டு, உச்ச நீதிமன்றத்தின் கருத்தைக் கேட்கும் என்று நாங்கள் நம்புகிறோம், இதனால் ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை இருக்கும்.

* மோடி அரசின் ஊழலின் மற்றொரு ஆதாரம்: ராகுல்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி: நரேந்திர மோடியின் ஊழல் கொள்கைகளுக்கு மற்றொரு ஆதாரம் உங்கள் முன் உள்ளது. தேர்தல் பத்திரங்களை லஞ்சம் மற்றும் கமிஷன் வாங்குவதற்கான ஊடகமாக பாஜ மாற்றியிருந்தது. இன்று இது வெளிப்பட்டுள்ளது. அரசியல் நிதிக்கு ஈடாக ஒவ்வொரு தேசிய வளத்தையும் விற்பனைக்கு வைக்க மோடி தயாராக இருக்கிறார்.

ஆனால், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை கோரிய விவசாயி ஒருவர் தேர்தல் பத்திரங்களில் முதலீடு செய்ய முடியாததால் முகம் சுளிக்கிறார். இது என்ன ஒரு கேலிக்கூத்து. விமான நிலையங்கள், சுரங்கங்கள், நிலத்தின் விற்பனைக்கு ஈடாக, தூக்கி எறியப்படும் விலையில் தேர்தல் பத்திரங்கள் பெரும்பாலும் உள்ளன’ என்று கூறினார்.

* வெளிப்படைத்தன்மை வேண்டும்: ஆம்ஆத்மி
டெல்லி ஆம்ஆத்மி அமைச்சர் அடிசி: உச்ச நீதிமன்றத்தின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். தேர்தல் நிதி வெளிப்படைத்தன்மையில் இது ஒரு முக்கிய நடவடிக்கை. மற்றபடி தேர்தல் பத்திரங்கள் மூலம், எந்த நபர் எந்த கட்சிக்கு நிதி வழங்குகிறார் என்பது தெரியவில்லை. எந்த அரசியல் கட்சிக்கு எவ்வளவு பணம், எந்த நபர் கொடுக்கிறார் என்பது நாட்டின் ஜனநாயகத்திற்கு முக்கியம்.

மத்தியிலோ அல்லது மாநிலங்களிலோ ஆட்சி செய்யும் கட்சிகளின் நிதி ஆதாரத்தை பொதுமக்கள் அறிந்து கொள்வது முக்கியம். அரசின் முடிவுகள் வாக்காளர்களின் விருப்பத்தால் இயக்கப்படுகிறதா, அல்லது யார் அவர்களுக்கு நிதி உதவி செய்கிறார்களோ அவர்களது விருப்பத்தால் எடுக்கப்படுகிறதா என்பதை மக்கள் அறிவது முக்கியம். இது நாட்டின் ஜனநாயகத்திற்கு ஒரு முக்கியமான படியாகும்.

* பா.ஜவுக்கு ஒரு அடி; திரிணாமுல்
திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ்: இந்தத் தீர்ப்பு நாட்டில் தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்திய கட்சிக்கு ஒரு அடி. உச்ச நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். திரிணாமுல் காங்கிரஸ் எப்போதும் வெளிப்படைத்தன்மைக்கு ஆதரவாக உள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜி எப்போதும் தேர்தல் சீர்திருத்தங்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.

* கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகம்; சீதாராம் யெச்சூரி
மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி: தேர்தல் பத்திர சட்டம் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரம்பற்ற நன்கொடை அளிக்கலாம் என்று கூறுகிறது. இதன் மூலம் ஏராளமான விற்பனை நிறுவனங்களைத் திறக்கலாம், கருப்புப் பணத்தை வெள்ளையாக்கலாம். அரசியல் கட்சிகளுக்கு சட்டப்பூர்வமாக நன்கொடை அளிக்கலாம். இதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

You may also like

Leave a Comment

two × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi