நம்மில் சிலர் வீட்டிற்கு அருகாமையிலுள்ள ஆலயத்திற்குச் சென்று வழிபாடு நடத்துகிறோம். ராசிப்படி கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தால்தான் இறைவன் அருள் கிட்டும் என்று சிலர் சொல்கிறார்களே?
– வாசன், தென் எலப்பாக்கம்.
அவரவர் ராசி அறிந்து கோயிலுக்குச் செல்ல வேண்டுமென்றால் இறைவனின் அருள் சிலருக்கு மட்டுமே கிட்டும். கண்ணுக்குப் புலப்படாத பராசக்தியின் அருள் நிரம்பியதாகவே இவ்வுலகு உள்ளது என்று தேவி மகாத்மியம், 11-வது அத்தியாயத்தில் கூறப்படுகிறது. ‘‘சிதி ரூபேண யா க்ருத்ஸனம் ஏதத் வ்யாப்ய ஸ்திதா ஜகத்’’. எனவே, ராசிப்படியோ, அல்லதோ எப்படியானாலும் அனைவரும் ஏதேனும் ஒரு ஆலயத்திற்குச் சென்று வழிபடத்தான் வேண்டும்.
தானம் என்பது என்ன? தர்மம் என்பது என்ன?
– பார்த்தசாரதி, விழுப்புரம்.
தானம் என்பது வேறு, தர்மம் என்பது வேறு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஏதோ ஒரு வகையில் பலனை எதிர்பார்த்துச் செய்வது தானம். எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் செய்வது தர்மம். பலனை எதிர்பார்த்துச் செய்யும் தானத்தில் நிச்சயமாக பழைய துணிகளைக் கொடுக்கக் கூடாது. அது நீங்கள் எதிர்பார்த்த பலனுக்கு எதிர்மறையான விளைவுகளையே தோற்றுவிக்கும். அதே நேரத்தில் நல்ல நிலையில் இருக்கும் உபயோகித்த துணிகள் ஏதோ ஒரு காரணத்தினால் நமக்கு பயன்படாத பட்சத்தில் அதனைத் தூக்கி எறிவதற்கு பதிலாக இல்லாதோர்க்கு கொடுத்து உதவலாம்.
அதுவும் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே. கிழிந்த துணிகளை நிச்சமாக தானமாகவோ அல்லது தர்மமாகவோ கொடுக்கக் கூடாது. உபயோகமில்லாத கிழிந்த துணிகளைக் கொடுத்து விட்டார்களே என்று யார் மனமும் புண்படக்கூடாது என்பதே மிக முக்கியம். நல்ல நிலையில் உள்ள துணிகளை ஏழைகளுக்கு கொடுத்து உதவுவதில் தவறில்லை.
ராசிபலன்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மாறுபடுமா? இருவருக்கும் ஒன்று தானா?
– த.சத்தியநாராயணன், அயன்புரம்.
ராசிபலன்கள், ஆண் பெண் இருபாலாருக்கும் ஒன்றே. கிரகங்களின் செயல்கள் ஆணுக்கு ஒருவாறாகவும், பெண்ணுக்கு வேறுமாதிரியாகவும் அமைவதில்லை. ஜாதகத்தில் உள்ள பன்னிரண்டு பாவங்களும் அவ்வாறே பலன் அளிக்கின்றன. ஆண்பெண்ணுக்குரிய கடமைகளுக்கு ஏற்றவாறு ஒருசில விஷயங்களில் லேசான மாற்றம் இருக்கலாமே தவிர, ஆண்களுக்குத் தனியாகவும், பெண்ணிற்குத் தனியாகவும் ராசிபலன்கள் அமைவதில்லை.
வலம்புரி சங்கினை வீடு, கடைகளில் வைத்து பூஜிக்கலாமா?
– இரா.வைரமுத்து, ராயபுரம்.
வலம்புரி சங்கை வீட்டில் வைத்து பூஜிக்கலாம். வலம்புரி சங்கு வழிபாட்டிற்கு ஆசார, அனுஷ்டானங்கள் தேவை என்பதால், நான்குபேர் வந்து செல்லும் கடையில் வைப்பதைவிட, நம் வீட்டுப் பூஜையறையில் வைத்து தினசரி பூஜை செய்து வருவதே நல்லது. தெய்வ விக்கிரகங்களைப் போலவே வலம்புரி சங்கும் பூஜைக்கு உரியது… வலம்புரி சங்கு வைத்து பூஜிக்கும் வீட்டில் உள்ளவர்களை நோய் நொடிகள் அண்டாது.