புதுடெல்லி: பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவது, துணைக்கண்ட அளவில் கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததல்ல என்று முன்னாள் நட்சத்திரம் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் கடந்த 14ம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில், இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை பந்தாடியது. உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற சாதனையை தக்கவைத்ததுடன், 8வது முறையாக வெற்றியை வசப்படுத்தி இந்திய அணி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது.
இது குறித்து கம்பீர் கூறியதாவது: முன்பு பாகிஸ்தான் அணி நம் மீது ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால், கடந்த பல வருடங்களாக, பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி அமர்க்களமாக விளையாடி ஆதிக்கம் செலுத்துகிறது. இது துணைக்கண்ட அளவில் கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்றே கருதுகிறேன். இந்த அணிகளிடையே இரு தரப்பு தொடர் நடந்தால், அது ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக இருக்கும் என்று சொல்லுவோம். இனி அப்படி இருக்காது என்பது சமீபத்திய போட்டிகளில் இருந்து தெளிவாகிவிட்டது. திறன் அடிப்படையில் இரு அணிகளுக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது’ என்றார்.