சென்னை: புளியந்தோப்பில் வீட்டுவாசலில் விளையாடியபோது 6 வயது சிறுவனை பக்கத்து வீட்டு நாய் கடித்து குதறியது. சென்னை புளியந்தோப்பு கே.பி பார்க் 14வது பிளாக் பகுதியில் வசித்து வருபவர் அருண்குமார்-தேன்மொழி தம்பதி. இவர்களுக்கு சவுந்தர்யா (12) என்ற மகளும், ஹரிஷ் குமார் (6) என்ற ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் சிறுவன் ஹரிஷ் குமார் தனது வீட்டின் கீழ் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஸ்டெல்லா என்பவர் வளர்க்கும் நாயை அவரது பேரன் அரவிந்த் (10) நடை பயிற்சிக்காக வெளியே அழைத்துச் சென்றான். அப்போது அந்த நாய் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஹரிஷ்குமாரை கண்டதும் திடீரென பாய்ந்து கடித்துக் குதறியது.
இதில் சிறுவனுக்கு ஐந்து இடங்களில் காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் உடனடியாக சிறுவனை மீட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவம் தொடர்பாக பேசின் பிரிட்ஜ் போலீசார் ஸ்டெல்லா, அவரது மகள் ப்ரீத்தா மற்றும் பேரன் அரவிந்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.