தர்மபுரி: தர்மபுரி அருகே பட்டிக்குள் புகுந்த நாய்கள் கடித்து குதறியதில், 13 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. தர்மபுரி அருகே தடங்கம் பெருமாள்கோயில்மேடு பகுதியைச் சேர்ந்த தாமோதரன்- முனியம்மாள் தம்பதியினர், 30க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகின்றனர். தினசரி ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு, இரவு நேரங்களில் பட்டியில் அடைத்து வைத்து விட்டு, அங்கேயே காவலுக்கு படுத்து உறங்குவது வழக்கம். நேற்று முன்தினம், மேய்ச்சலுக்கு பின்பு, ஆடுகளை பட்டியில் அடைத்தனர். அப்போது, மழை பெய்ததால் இரவில் அங்கு தங்க வழியின்றி, வீட்டிற்கு வீட்டிற்கு சென்று விட்டனர்.
நேற்று காலை பட்டிக்கு சென்று பார்த்தபோது, 13 ஆடுகள் குடல் சரிந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தன. அதனைக்கண்டு தம்பதி கண்ணீர் வடித்தனர். இரவு நேரத்தில் பட்டிக்குள் நுழைந்த தெருநாய்கள் கடித்து குதறியதில் 13 ஆடுகள் உயிரிழந்தது தெரிய வந்தது. அப்பகுதியில் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த ஆடுகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.