புதுடெல்லி: பணம் கட்டுக்கட்டாக எடுக்கப்பட்ட விவகாரத்தில் ஐகோர்ட் நீதிபதி தொடர்பான ஆவணத்தை தரமுடியாது என்று சுப்ரீம் கோர்ட் பொது தகவல் அலுவலர் பதில் அளித்துள்ளார். கடந்த மார்ச் 14ம் தேதி டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரபூர்வ இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டபோது, அவரது வீட்டின் கிடங்கில் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்தியது. இந்தக் குழுவில் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தாவாலியா, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் இடம்பெற்றனர். கடந்த 3ம் தேதி இந்தக் குழு தனது அறிக்கையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் சமர்ப்பித்தது.
இந்த அறிக்கையில் யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார். ஆனால் அவரை பதவி விலகுமாறு தலைமை நீதிபதி கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட அவர், அங்கும் அவருக்கு நீதிப் பணி ஒதுக்கப்படவில்லை. மேலும் கடந்த 8ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்ணா, குழுவின் அறிக்கையையும், யஷ்வந்த் வர்மாவின் பதிலையும் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு அனுப்பினார். நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் இல்லத்தில் பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பான உள்விசாரணை அறிக்கையை வெளியிடக் கோரிய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த வழக்கறிஞர் அம்ரித்பால் சிங் கல்சா தாக்கல் செய்த மனுவில், மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவின் அறிக்கையையும், முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தையும் வெளியிடக் கோரியது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் மத்திய பொது தகவல் அலுவலர், இந்தத் தகவல்கள் ரகசியமானவை என்றும், அவை நாடாளுமன்ற சட்டத்திட்டங்களை மீறியதாக கருதப்படும் என்று கூறி மனுவை நிராகரித்தார். மேலும் இந்த அறிக்கையை வெளியிடுவது, நீதித்துறையின் சுதந்திரம், தனியுரிமை உரிமை மற்றும் ரகசியத்தன்மை ஆகியவற்றை பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இப்போது, இந்த விவகாரத்தில் நீதிபதிக்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஒன்றிய அரசும், நாடாளுமன்றமும் முடிவு செய்யும் என்கின்றனர்.