புதுடெல்லி: உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு பரிந்துரைகளை மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு வழங்கி உள்ளது. கொல்கத்தா பெண் டாக்டர் கொலை வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், சுகாதார பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நெறிமுறைகளை உருவாக்க தேசிய பணிக்குழுவை அமைத்துள்ளது. மேலும், மாநில அரசுகளுடன் ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தி, மருத்துவர்கள் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளை 2 வாரத்தில் எடுக்க உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் டிஜிபிகளுக்கு ஒன்றிய சுகாதார துறை செயலாளர் அபூர்வ சந்திரா நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சுகாதார பணியாளர்கள் பாதுகாப்பை மேம்படுத்தவும், பாதுகாப்பான பணிச்சூழலை வழங்கவும் பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
* சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பிற்கான மாநிலச் சட்டங்கள் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடர்புடைய பிரிவுகள் மற்றும் தண்டனை விவரங்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ளூர் மொழியிலும் ஆங்கிலத்திலும் காட்சிப்படுத்த வேண்டும்.
* மூத்த மருத்துவர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளை கொண்ட மருத்துவமனை பாதுகாப்புக் குழு மற்றும் வன்முறைத் தடுப்புக் குழுவை அமைத்து, தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை வியூகங்கள் வகுக்க வேண்டும்.
* மருத்துவமனையின் முக்கிய பகுதிகளுக்கு மக்களும், நோயாளிகளின் உறவினர்களும் செல்வதை ஒழுங்குபடுத்த வேண்டும். நோயாளிகளை கவனித்து கொள்பவர்கள் மற்றும் உறவினர்களிடம் விசிட்டர் பாஸ் கட்டாயம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
* இரவுப் பணி நேரங்களில் மருத்துவமனை கட்டிடங்கள், விடுதிக் கட்டிடங்கள் மற்றும் பிற பகுதிகளில் தங்கியிருக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். மருத்துவமனையின் அனைத்துப் பகுதிகளிலும் சரியான வெளிச்சம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* இரவு நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் வழக்கமான கண்காணிப்பு ரோந்து, 24 மணி நேரமும் பணியாளர்களை கொண்ட பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறை மற்றும் அருகிலுள்ள காவல் நிலையத்துடன் தொடர்பு இருக்க வேண்டும்.
* மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்களின் நிலை மற்றும் தேவைகளை மறுஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, மருத்துவர்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான தயார்நிலை குறித்து தலைமைச் செயலாளர்கள் மற்றும் டிஜிபிக்களுடன் தேசிய பணிக்குழு நேற்று முன்தினம் முதல் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.