சென்னை: மங்கையர்கரசி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மருத்துவர்கள், மருத்துவமனை சார்ந்த விளம்பரங்கள், பொதுமக்களை தவறாக வழிநடத்துகின்றன. போலியான விளம்பரங்களை கொடுத்து மருத்துவமனைகள் மக்களை நம்ப வைக்கின்றன. போலி விளம்பரங்களை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், மருத்துவர்கள், மருத்துவமனை சார்ந்த ஒவ்வொரு விளம்பரங்களையும் ஊடகங்கள் சரிபார்த்து வெளியிட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. மனுதாரர் இது சம்பந்தமாக மருத்துவ ஆணையத்திடம் புகார் அளிக்கலாம். போலியான மருத்துவமனைகள், மருத்துவர்கள் விளம்பரங்களை வெளியிட்டால் அது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கலாம். ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டங்கள் உள்ளதால் விளம்பரங்கள் வெளியிடும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பொதுப்படையாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


