செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நரம்பியல், பிளாஸ்டிக், மறு சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நரம்பியல் மருத்துவ பிரிவில், பக்கவாதம் தொடர்பான அவசர சிகிச்சை நரம்பியல் துறை சிறப்பு மருத்துவர்களால் 24 மணி நேரம் சிகிச்சைகள் வழங்கபட்டு வருகிறது. ஆண்டுதோறும் சுமார் 1,500 பேர் பக்கவாத நோய்க்கான சிகிச்சையால் பலன் அடைந்து வருகின்றனர். செங்கல்பட்டு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவும், 24 மணி நேரமும் நரம்பியல் சிகிச்சையானது சிறப்பு மருத்துவர்களால் வழங்கபட்டு வருகிறது.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீராத தணிப்பு சிகிச்சை முறைகள் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டு இதுவரையில் 111 நோயாளிகளுக்கு இவ்வகை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புற்றுநோயால் பாதித்தவர்களுக்கு சிறப்பான முறையில் மிகவும் சிரமத்தை ஏற்படுத்தும் வழியினை குறைப்பதற்கான சிகிச்சையினை மயக்கவியல் துறை மருத்துவர்கள் செய்து வருகின்றனர். வலிக்கு காரணமாக உள்ள நரம்பினை துல்லியமாக கண்டறிந்து அதனை செயலிழக்க செய்வதன் மூலம் வலி நிவாரணம் அளிக்கப்படுகிறது. புற்றுநோயாளிகளுக்கு இதர மருந்துகள் முற்றிலும் குறைக்கப்படுகிறது.
இவை சிகிச்சை முறைகள் சென்னை மருத்துவக் கல்லூரியில் செயல்படுவதுபோல உயர்தர முறைகளில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தனியாக ஒதுக்கப்பட்டு சிறப்பான உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு முதல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவில் இருதய ஊடுருவி ஆய்வகம் தொடங்கப்பட்டது. நாள்தோறும் இங்கு ஆஞ்சியோ பரிசோதனை. ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மற்றும் நிரந்தர இதயம் ஒடுக்கி ஸ்பேஸ் மேக்கர் பொருத்துதல் போன்ற சிகிச்சைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இம்மருத்துவமனையில் முதல்முறையாக பல வருடங்களாக நெஞ்சு வலி படபடப்பினால் அவதி உற்று வந்த மூன்று நோயாளிகளுக்கு இருதயத்துடிப்பினை அதிவேகமாகும் தசைனார்களை கண்டறிந்து சரி செய்யும் சிகிச்சை மற்றும் ஆய்வு செய்து வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இவ்வகையான சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்ய இரண்டு முதல் மூன்று லட்சங்கள் செலவாகும் நிலையில், இங்கே முதலமைச்சரின் தனி விரிவான மருத்துவ காப்பீட்டின் கீழ் இருதய சிகிச்சை பிரிவு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
இம்மருத்துவமனையில் நோயாளியின் வலது காலின் இரண்டாவது உருளை இடது கட்டை விரலாக மாற்றி பிளாஸ்டிக் மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை துறைமருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்டிக் மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை துறையானது தொடங்கப்பட்டு முதல் முறையாக 35 வயது சுரேஷ் என்பவருக்கு வலது பாதத்தில் இரண்டாவது விரலை எடுத்து இடது கையின் கட்டை விரலை மறு சீரமைப்பு செய்து சாதனை படைத்துள்ளனர். ஜெயங்கொண்டத்தை சேர்ந்த தொழிலாளி சுரேஷ் துபாயில் பணிபுரிந்தார்.
மூன்று வருடங்களுக்கு முன்பு மின்சார தீக்காயம் காரணமாக அவரது இடது கையின் கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரல் கருகிப் போய்விட்டது. ஐந்து நாட்களுக்குப் பிறகு துபாயில் அவரது இடது கையின் கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலை துண்டிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்பி அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த அறுவை சிகிச்சை வலது பாதத்தில் இருந்து வலது இரண்டாவது விரல் அதன் ரத்த நாளங்கள் நரம்புகள் மற்றும் தசை நார்கள் ஆகியவற்றுடன் பிரிக்கப்பட்டு இடது கையின் தொடர்புடைய உறுப்புகளுடன் இணைக்கப்பட்டது.
நுண்ணோக்கியை பயன்படுத்தி மிகவும் துல்லியமாக செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சை சுமார் 8 மணி நேரம் நீடித்து மறு சீரமைப்பு அறுவை சிகிச்சை அதாவது பிளாஸ்டிக் சர்ஜரி ஆக செய்யப்பட்டது.விரலை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை ஆனது செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரியில் முதன்முறையாக வெற்றிகரமாக செய்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு பிறகு மாற்றியமைக்கப்பட்ட விரலின் நிறம் உடனடியாக இளஞ்சிவப்பு நிறமாக மாறுவது அறுவை சிகிச்சையின் வெற்றியை தீர்மானிக்கிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். பிளாஸ்டிக் சர்ஜரியில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை அடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் செய்து சாதனை செய்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிளாஸ்டிக் சர்ஜரி துறையின் தலைவர் செல்வன், நரம்பியல் துறை தலைவர் பாலாஜி, இருதயத்துறை தலைவர் கண்ணன், மயக்கவியல் துறை தலைவர் பத்மநாபன், பொது அறுவை சிகிச்சை துறை தலைவர் அரசு, மருத்துவ கண்காணிப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் இதில் கலந்து கொண்டனர்.