திருத்தணி: மருத்துவர்கள், செவிலியர்களை இடமாற்றம் செய்யக்கோரி அரசு மருத்துவமனையை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பொதட்டூர்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை பேரூராட்சி மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவ சேவை பெற பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையை நாடுகின்றனர். இந்த மருத்துவமனையின் மருத்துவ அலுவலராக சசிகலா கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இங்கு நோயாளிகளுக்கு மருத்துவர்கள் உரிய நேரத்தில் மருத்துவம் பார்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் மருத்துவர்கள் பணியில் இல்லாததால், மருத்துவமனை அறைகள் மூடப்பட்டு மருத்துவ பணியாளர்கள் உள்ளே தூங்கி விடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இரவில் அவசர சிகிச்சை பெற மருத்துவர்கள் இல்லாத நிலையில் பலர் உயிரிழந்து விடுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் குறைந்தபட்ச மருத்துவ சேவையும் கிடைப்பதில்லை. உள்ளூரைச் சேர்ந்தவர் மருத்துவ அலுவலராக இருப்பதால் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு வருவதில்லை. அவர் நடத்தி வரும் தனியார் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும் என்று கூறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியரை பணியிட மாற்றம் செய்து 24 மணி நேரமும் சிகிச்சை வழங்கும் வகையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து மாவட்ட சுகாதரப்பணிகள் இணை இயக்குநரிடம் எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ செல்போனில் தொடர்பு கொண்டு பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் மீது புகார் செய்து, அவர்களை பணியிட மாற்றம் செய்து புதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் திரும்பிச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.