பெங்களூரு: பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில், ஏர் இந்தியாவின் ஐஎக்ஸ்2749 விமானம் சூரத் செல்ல தயாராக இருந்தது. அப்போது, ஆயுர்வேத பெண் டாக்டரான வியாஸ் ஹிரல் மோகன்பாய் என்பவர், தனது இரு கைப்பைகளில் ஒன்றை தனது இருக்கை 20Fல் வைத்துள்ளார். ஆனால், மற்றொரு பையை விமான ஊழியர்கள் அமரும் இடத்தில் பயணிகளுக்கு தடை செய்யப்பட்ட பகுதியில் வைத்துள்ளார்.
இதைப் பார்த்த விமான ஊழியர்கள், அந்த பையை எடுத்து ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்குமாறு கேட்டுள்ளனர்.
ஆனால், வியாஸ் ஹிரல் இதை ஏற்க மறுத்து, ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ‘‘எனது பையை எடுத்தால் விமானத்தை தரையில் விழுந்து நொறுங்கச் செய்வேன்” என அச்சுறுத்தியுள்ளார். இதையடுத்து, விமானி மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு தகவல் அளித்துள்ளார். பாதுகாப்பு படையினர் உடனடியாக செயல்பட்டு, பெண் டாக்டர் வியாஸ் ஹிரலை கைது செய்தனர். இச்சம்பவத்தால் விமானம் இரண்டு மணி நேரம் தாமதமாக சூரத்துக்குப் புறப்பட்டுச் சென்றது.