சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: வாழும் வரலாறாக, ஒப்பில்லா சமூக களப் பேராளியாக, இளைஞர்களின் போற்றத்தக்க முன்மாதிரியாக திகழும் நூற்றாண்டுகளை கடந்த மகத்தான சுதந்திர போராட்ட தியாகிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டுமென தமிழக முதல்வர் பரிந்துரைத்ததன் அடிப்படையில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சனநாயக அமைப்புகளான செனட் மற்றும் சிண்டிகேட் ஆகியவை ஒருமனதாக, சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டதை, தமிழ்நாடு ஆளுநர் கையெழுத்திட மறுத்திருப்பது வருந்தத்தக்கது. 80 ஆண்டுகளாக சாதாரண ஏழை, எளிய மக்களின் துயரைப் போக்க ஓயாத குரலில் ஒலித்துக் கொண்டிருக்கும் அவருக்கு பட்டம் வழங்குவதன் மூலம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வரலாற்றில் ஒரு நீங்கா புகழை நிச்சயம் பெறும். எனவே, தமிழக ஆளுநர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.