சென்னை: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த டாக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 1000க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயிற்சி மருத்துவர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் பயிற்சி மாணவிக்கு, டாக்டர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இவரை கண்டித்து, நேற்று முன்தினம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் 500க்கும் மேற்பட்ட பயிற்சி மாணவ-மாணவிகள் கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் பயிற்சி பெண் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என பயிற்சி மருத்துவ மாணவர்கள் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, பாலியல் தொல்லை கொடுத்து வந்த டாக்டர் ஜிதேந்திரன், போராட்ட இடத்துக்கு வந்து மருத்துவ மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக, நேற்று காலை பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான டாக்டர் ஜிதேந்திரனை பணியிடை நீக்கம் செய்து செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது.