கொல்கத்தா: பெண் மருத்துவர் பலாத்கார கொலைக்கு நீதி கேட்டு மேற்குவங்க தலைமை ெசயலகம் முற்றுகை போராட்டம் இன்று நடப்பதால், கொல்கத்தாவில் 6,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி, மாணவர் அமைப்பு ஒன்று மாநில தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துகிறது.
ஆனால் மாநில அமைதியின்மையை ஏற்படுத்த சில அமைப்புகள் தூண்டிவிடுவதாக காவல் துறை தெரிவித்துள்ளது. ‘நபன்னா அபிஜன்’ எனப்படும் தலைமை செயலகத்தை நோக்கி நடத்தப்படும் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க கொல்லகத்தாவின் ஹேஸ்டிங்ஸ், ஃபர்லாங் கேட், ஸ்ட்ராண்ட் ரோடு, ஹவுரா போன்ற இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கை பராமரிக்க 6,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் யுஜிசிஎன்இடி தேர்வு இன்று நடப்பதால், தேர்வு மையங்களுக்குச் செல்வோருக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இருந்தும் தேர்வெழுத செல்ல தடையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.