* உடல்நிலை குறித்து அதிர்ச்சி தகவலால் தற்கொலை முடிவை தேடும் இளைஞர்கள்
* இணையதளங்களை நம்பி வாழ்க்கை ஓட்டும் 71.8% மக்கள்
* ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்
* சிறப்பு செய்தி
‘நோய் நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச்செயல்’ என்பது மருத்துவம் குறித்து வள்ளுவர் எழுதிய குறள் வரிகள். நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? அந்த நோயை தீர்க்கும் வழிமுறைகள் என்ன? என்பதை ஆராய்ந்து சிகிச்சை செய்யும் மருத்துவமே நலம் பயக்கும் என்பது இந்தக்குறள் வரிகள் உணர்த்தும் பொருள். இதை பின்பற்றியே நமது முன்னோர்களின் வாழ்க்கை முறை இருந்தது. ஆனால் இயந்திரமயமாகி விட்ட இன்றைய வாழ்க்கை முறை இதையெல்லாம் சுக்கு நூறாக மாற்றி விட்டது. எதற்கெடுத்தாலும் மாத்திரை, எப்போதும் மருந்து, சிறிய காயம் என்றால் கூட பதற்றம் நிறைந்த ஆபரேஷன் என்று மருத்துவம் திசைமாறி பயணிக்க ஆரம்பித்துள்ளது.
இது ஒருபுறமிருக்க தாங்களே மருத்துவர்களாக உருவாகி தனக்கும், குடும்பத்திற்கும் சிகிச்சை அளித்துக் கொள்ளும் சில அதிமேதாவிகளும் உருவாகி வருகின்றனர். யூடியூப் பார்த்து பெண்ணுக்கு பிரசவம் பார்த்த கணவர், குழந்தை பிறந்த நிலையில் பெண் உயிரிழப்பு என்பது போன்று வரும் செய்திகள், இதற்கான ஆதாரங்கள். இதேபோல் சமீப காலமாக கூகுளில் நோய் பாதிப்புகளுக்கு தீர்வு காணவேண்டும் என்று மருந்து தேடுவோரும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் சொல்கிறது. அண்மையில், மதுரை திருப்பரங்குன்றம் அருகே, ஒருவர் இணையத்தில் பார்த்த தகவல்களைக் கண்டு பயந்து தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உடல் நலம் சரியில்லாத காரணத்தால் மருத்துவமனை சென்றவருக்கு உடலில் உப்புச் சத்து அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உப்புச் சத்து அதிகமாக இருந்தால் என்னவாகும் என இணையத்தில் படித்துள்ளார்.
அதில் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்படலாம் என்று கூறப்பட்டிருப்பதை படித்து, பயத்தில் தற்கொலை செய்து கொண்டது இதற்கான சாட்சியம். இதேபோல் பல இளைஞர்கள் இந்த முடிவை தேடுகின்றனர். ஆங்கில மருத்துவம் முதல் பாட்டி வைத்தியம் வரை இணையதளங்களில் தகவல்கள் கிடைக்கின்றன. உடல் உபாதைகளுக்கு மருத்துவர்களை நம்புவதை விடவும், இணையதளத்தை நம்பும் போக்கு ஒரு புதிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இது போன்ற போக்கு இளைய தலைமுறையிடம் மட்டுமன்றி 18 வயது முதல் சுமார் 45 வயது வரையிலானவர்களிடமும் உள்ளது.
அமெரிக்காவின் ஆய்வுக்கட்டுரை ஒன்று 71.8 சதவீதம் பேர் உடல்நலம் சார்ந்த தகவல்களை வணிக ரீதியிலான இணையதளங்களை பார்த்து தெரிந்து கொள்கின்றனர் என்று கூறுகிறது. கூகுள் போன்ற இணையத்தின் மூலம் நேரடியாக 11.6 சதவீதம் பேர் மருத்துவ தகவல்களை தேடுவதாகவும், ஆய்வுகள் சார்ந்த இணையதளங்களிலிருந்து 11.1 சதவீதம் பேரும், அரசு சார்ந்த இணையதளங்களிலிருந்து 5.5 சதவீதம் பேரும் தகவல்களை பெறுகின்றனர் என்று அந்த ஆய்வுகள் கூறுகிறது. விரல் நுனியில் அனைத்து தகவல்களும் கிடைக்கின்றன என்பது நம் அன்றாட வாழ்வை பல்வேறு விதங்களில் எளிமையாக்கினாலும் மருத்துவம் சார்ந்த தகவல்களுக்கு இணையத்தை மட்டும் நம்பி இருப்பதால் அபாயங்களே அதிகம் நிகழும் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.
உதாரணமாக துரிதமான மனநிலை மாற்றத்துக்கான மருந்துகளை ஒருவருக்கு மருத்துவர் கொடுக்கிறார். அந்த மருந்து வலிப்புகளை தவிர்க்கவும் கொடுக்கப்படுவதாகும். இணையத்தில் மருந்து குறித்து படித்துவிட்டு, தனக்கு ஏன் வலிப்புக்கான மருந்து கொடுக்கப்படுகிறது என குழம்பி, பதட்டமடைகிறார் நோயாளி. சில நோயாளிகள் இதுபோன்ற தகவல்களால் மருந்து உட்கொள்வதை நிறுத்தி விடுகின்றனர். இதனால் நோயாளிகளின் சிக்கல்களும் மருத்துவரின் வேலைப்பளுவும் அதிகரிக்கிறது என்பது மருத்துவ வல்லுநர்களின் ஆதங்கம்.
இதுகுறித்து இந்திய மருத்துவ மேம்பாட்டு அமைப்புகளை சேர்ந்த நிபுணர்கள் கூறியதாவது: கூகுள் போன்ற இணையதளங்களில் மருத்துவத்தின் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, மருத்துவருக்கு இணையானதாக இருக்காது. உங்களுக்கான நோய் அறிகுறிகளை நீங்கள் பதிவிட்டால், உங்களுக்கு என்ன நோய் இருக்கலாம் என்ற பட்டியலை மட்டுமே இணையம் தரும். ஆனால் மருத்துவரிடம் சென்றால் மட்டும்தான் உங்கள் வயது, பாலினம், இணை நோய்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப சரியான தகவல்களை பெற முடியும்.
இணையத்தை பார்த்து அதிகமாக பின்பற்றப்படும் மற்றொரு விஷயம் ‘டயட்’ எனப்படும் உணவுப் பழக்கங்கள். பாலியோ டயட், கீடோ டயட், இண்டர் மிட்டண்ட் பாஸ்டிங் என பல்வேறு விதமான உணவு பழக்கங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. சரியான மருத்துவ ஆலோசனை இல்லாமல் இவற்றை பயன்படுத்துவதால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இல்லாமல் போகும், உடலில் வளர்சிதை மாற்றங்கள் ஏற்படக்கூடும், சுண்ணாம்பு சத்து குறைபாடு, புரத குறைபாடு ஏற்படலாம்.
அதேபோல் முதல் முறை கர்பிணிகளாக உள்ள இளம்பெண்களிடம் இணையத்தில் தகவல்களை தேடி படிக்கும் பழக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. இணையதளத்தில் படித்துவிட்டு வரும் மகளிர் மகப்பேறு குறித்து தகவல்களை முன்பே அறிந்துகொண்டிருப்பது மருத்துவருக்கு உதவியாக இருக்கும். ஆனால் தகவல்களை தவறாக புரிந்து கொள்ளும் போது அதுவே சவாலாகி விடும். உதாரணமாக இரண்டு மாத கர்பிணிக்கு ரத்தப் போக்கு ஏற்பட்டால், கூகுள் உடனடியாக அதனை கருச்சிதைவு என்று கூறும். ஆனால் அது எல்லா நேரங்களிலும் உண்மையல்ல.
தவறான தகவலை படித்து, மன உளைச்சலுக்கு ஆளாகி, அதையும் சேர்த்து மருத்துவர் கையாளும் நிலை ஏற்படும். ஒருவருக்கு ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால், அவர் ‘Low Hb” என்று இணையத்தில் தேடுவார். அப்படி தேடினால் ரத்த புற்றுநோய் குறித்த கட்டுரைதான் முதலில் வரும். இணையத்தில் எந்த கட்டுரையை அதிகம் வாசிக்கிறார்களோ, எந்த குறியீட்டு வார்த்தைகள் (key words) அதிகம் தேடப்படுகிறதோ அவைதான் முதலில் வரும். இது போன்ற பல்வேறு அபாயங்கள் இருப்பதால் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் தேவையற்ற பரிசோதனைகள் செய்வதையும் மருந்து தேடுவதையும் மக்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு மருத்துவ நிபுணர்கள் கூறினர்.
* ஒருவருக்கான தகவல் மற்றவருக்கு பொருந்தாது
பொதுவாக இளைஞர்கள், ஐடி ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் என 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் அதிகமாக இணையத்தை நம்புகிறார்கள். அதேபோல் மருத்துவர்கள் சிலரே கூட இணையத்தில் வீடியோக்களை பதிவிடுவதை நாம் காண முடிகிறது. அதில் கூறும் தகவல்களை அப்படியே ஒருவருக்கு பொருத்திப் பார்க்கக்கூடாது. இதில் சிலர் தவறான வழிகாட்டுதல்களை தருவதற்கான வாய்ப்பு உள்ளது. கொரோனா பரவிய காலத்தில் அது (கொரோனா) எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என தவறான தகவல் பரப்பிய மருத்துவர் மீது நடவடிக்ைக எடுத்த சம்பவங்களும் நடந்துள்ளது. ஆனால், மருத்துவ கவுன்சிலுக்கு பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களை கண்காணிக்க மட்டுமே அதிகாரம் உண்டு. எனவே, இணையத்தில் மற்ற இடங்களிலிருந்து கிடைக்கும் தகவல்கள் குறித்து, அதனை வாசிப்பவர்தான் எப்படி கையாள வேண்டும் என்ற முடிவை எடுக்க வேண்டும் என்கின்றனர் இந்திய மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள்.